

மதுரை
தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.15 கோடியில் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க உதவும் 'பெட் ஸ்கேன்' அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்குத் தயாரான நிலையில் உள்ள இந்த ஹைடெக் மருத்துவக் கருவி விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் மருத்துவம் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே மிக நுண்ணிய புற்றுநோய் செல்களை துல்லியமாகக் கண்டுபிடிக்க 'பெட் ஸ்கேன்' (Positron Emission Tomography) உதவுகிறது.
எம்ஆர்ஐ ஸ்கேனில் உடலில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் ஸ்கேன் எடுக்க முடியும். ஆனால், 'பெட் ஸ்கேன்' உடல் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு எந்த இடத்தில், எந்தளவுக்கு புற்றுநோய் பரவியிருக்கிறது, அதன் பாதிப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகவும், ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்கவும் உதவுகிறது.
இந்த கருவியை நிறுவுவதற்குப் பல கோடி ரூபாய் செலவாகும் என்பதால் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட இதுவரை 'பெட் ஸ்கேன்' அமைக்கப்படவில்லை. அதனால், ஏழை, நடுத்தர மக்கள் துல்லியமாகவும், ஆரம்ப கட்டத்திலே புற்றுநோய் சிகிச்சை பெற முடியாமலும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'டீன்' அலுவலக நுழைவு வாயில் அருகே தமிழகத்தில் முதல்முறையாக ரூ.15 கோடியில் 'பெட் ஸ்கேன்' ஆய்வுக் கூடம், தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நோயாளிகளை வைத்து ஓரிரு நாளில் அதற்கான பரிசோதனை ஓட்டம் நடக்க இருக்கிறது. அடுத்த ஓரிரு வாரங்களில் இந்த பெட் ஸ்கேன் வசதி, செயல்பாட்டுக்கு வர உள்ளது.
எலும்புப் பகுதியில் பரவியிருக்கும் புற்றுநோய் எம்ஆர்ஐ ஸ்கேனில் தெளிவாகத் தெரியாது. ஆனால், 'பெட் ஸ்கேனி'ல் தெளிவாக தெரியும். அதுபோல், தைராய்டு, குடல் இரைப்பையில் புற்றுநோய்க்கான மாற்றங்களையும் வேகமாக முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவும்.
எம்ஆர்ஐ-யைவிட 'பெட் ஸ்கேன்', புற்றுநோய் செல்களைக் கண்டுபிடிக்க அதிக ஆற்றல் கொண்டது. சென்னை அரசு மருத்துவமனையில் 'பெட் ஸ்கேன்' அமைக்கும் பணி தற்போது நடக்கிறது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சங்குமணி கூறுகையில், ‘"திறப்பு விழாவுக்குத் தயார் நிலையில் 'பெட் ஸ்கேன்' உள்ளது," என்றார்.
‘பெட் ஸ்கேன்’ எடுக்க ரூ.11 ஆயிரம் கட்டணமா?
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 7 லட்சமாக இருந்த உள் நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்து 55 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதில், ஒரு நாளைக்கு தினமும் 30 புதிய புற்று நோயாளிகளும், 70 பழைய புற்று நோயாளிகளும் சிகிச்சைப்பெறுகின்றனர்.
’பெட் ஸ்கேன்’ ஆய்வுக்கூடத்தில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகளுக்கு ‘பெட் ஸ்கேன்’ எடுக்கலாம். தனியார் மருத்துவமனையில் ‘பெட் ஸ்கேன்’ எடுக்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் ‘பெட் ஸ்கேன்’ எடுப்பதற்கு ரூ.11 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
இந்த ‘பெட் ஸ்கேன்’ மையத்தை, மருத்துவ சேவைக் கழகம் நேரடியாக அமைக்காமல் இடம் மட்டும் வழங்கி தனியார் நிறுவனம் மூலம் அமைத்துள்ளதாலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு அந்தத் தனியார் நிறுவனம் கட்டணமாக செலுத்தும் எனக் கூறப்படுகிறது.