

சேலம்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 108.40 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர்வரத்து 2 லட்சம் கனஅடியில் இருந்து 48 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த 9-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 5,236 கனஅடியாக இருந்த நிலையில், அணையின் நீர் மட்டம் 54.50 அடியாக இருந்தது. இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், 10-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித் தது.
இதன் பின்னர் ஒவ்வொரு நாளும் நீர்வரத்தின் அளவு அதிகரிக்க, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 12-ம் தேதி அதிகபட்சமாக விநாடிக்கு 2.53 லட்சம் கனஅடி நீர்வரத்து இருந்தது.
இதன் காரணமாக, நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி யளவில் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. குறிப்பாக, 9-ம் தேதி தொடங்கி 13-ம் தேதிக்குள் 4 நாட்கள் இடைவெளி யில் அணையின் நீர் மட்டம் 56 அடி உயர்ந்தது. இதனிடையே, டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து 13-ம் தேதி காலையில் நீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் காலை விநாடிக்கு 2.30 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 8 மணியளவில் 1.50 லட்சம் கனஅடியாக குறைந்தது.
இந்நிலையில், நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று இரவு விநாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும், நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து, நேற்று மாலை 108.9 அடியாக உயர்ந்தது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியை சில நாட்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் நேற்று மாலை 8 மணி நிலவரப்படி நீர் இருப்பு 76.88 டிஎம்சியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி இரவு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை இந்த அளவில் மேலும் சரிவு ஏற்பட்டது. காலை 9 மணி நிலவரப்படி விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி என்ற அளவில் நீர்வரத்து இருந்தது.
இதற்கிடையே, கர்நாடகா அணைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மீண்டும் சற்றே அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப் பட்ட நீரானது நேற்று காலை 11 மணியளவில் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
அப்போது நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியானது. மாலை வரை அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வெள்ளப் பெருக்கு காரணமாக ஒகேனக் கல்லில் பரிசல் இயக்கவும், அருவி, ஆறு உள்ளிட்ட இடங்களில் குளிக்க வும் அறிவிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.