

சென்னை
வேலூர் மாவட்டம் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவருக்கு, தலைமைச் செயலர் முப்படை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து விழாவில் முதல்வர் பழனிசாமி அவர் பேசியதாவது:
"தியாகத்திற்கும் அமைதிக்கும் அடையாளமாகத் திகழும் புனிதமான தேசியக் கொடியை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடனும், மக்களின் ஆதரவுடனும் மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் ஏற்றியதில், பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். பாரதியார் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே', எனப் பாடினார்.
'எங்கும் சுதந்திரமே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு' என்ற பாடலின் மூலம் சுதந்திரம் என்பது, சமத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி என்று முழங்கினார் பாரதியார். அனைவரும் எந்தவித பேதமும் இன்றி, கொண்டாட வெண்டிய உணர்வுபூர்வமான திருவிழாதான், சுதந்திர தின விழா.
காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமையேற்று, அயலாரை அறவழியில் எதிர்த்துப் போராடி, இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். அந்நியர்களிடமிருந்து இந்தியாவைக் காக்க, இன்னுயிர் நீத்தோர் எண்ணிலடங்காதவர்கள். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, அழகு முத்துக்கோன், வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன், குயிலி, முத்து ராமலிங்கத் தேவர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காயிதே மில்லத், பெரியார், ராஜாஜி, காமராஜர், தில்லையாடி வள்ளியம்மை போன்ற எண்ணற்ற தலைவர்கள் இந்திய விடுதலைக்காக, எண்ணிலடங்காத் தியாகங்களைச் செய்ததுடன், சுதந்திர உணர்வையும் பரப்பினர்.
இவர்கள் இன்னும் தியாகச் சுடர்களாக இந்தியாவுக்கு வெளிச்சம் தந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் தியாகத்தைப் போற்றிடும் வகையிலும், எதிர்காலத் தலைமுறையினர், இவர்களது அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து போற்றும் வகையிலும், தமிழக அரசு இவர்களுக்கு 35 மணி மண்டபங்களையும், முக்கிய இடங்களில் உருவச் சிலையும் அரசு சார்பில் விழாக்கள் நடத்தி சிறப்பித்து வருகிறது.
நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. மேலும், கே.வி.குப்பத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படுகிறது".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.