

சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுவடைந்து வருவதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி ஆகியவற்றில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு மற்றும் உள் மாவட்டங் களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்
குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதனால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக பெரம்பலூரில் 8 செமீ, கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செமீ சின்னகல்லார், தேனி மாவட்டம் பெரியார் ஆகிய இடங்களில் 6 செமீ, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நீலகிரி மாவட்டம் தேவாலா, தேனி மாவட்டம தேக்கடி, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு ந.புவியரசன் தெரிவித்தார்.