Published : 15 Aug 2019 08:36 AM
Last Updated : 15 Aug 2019 08:36 AM

ஆபத்து காலத்தில் உதவும் 'தூண்டில்' செயலியை 5 ஆயிரம் மீனவர்கள் பதிவிறக்கம்

சென்னை 

ஆபத்து காலத்தில் உதவும் ‘தூண்டில்' செயலியை 5 ஆயிரம் மீனவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக மீன்வளத்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக் கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். விசைப்படகு, நாட்டு படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் கள், வானிலை நிலவரத்தை அறிந்து கொள்வது இன்றியமையாததாக உள்ளது. இதுமட்டுமின்றி, கடல் கொந்தளிப்பு ஏற்படும் ஆபத்தான காலங்களில் பாதுகாப்பான இடங் களுக்குச் செல்லும் திசைகளை பல நேரங்களில் கண்டறிய முடியாத சூழல் இருந்து வருகிறது.

இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு ‘தூண்டில்' என்னும் செல்போன் செயலி மீன்வளத்துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியை தங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யும் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது தங்களது இருப்பிடம், கடற்பயண பதிவுகள், பாதுகாப்பான இடம் செல்ல வழிகாட்டி, மீன் அதிகம் கிடைக்கும் இடங்களை பதிவு செய்தல், வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். இந்த செயலியை இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘தூண்டில்' செயலியை இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். செயலியை பதிவிறக்கம் செய்ய தெரியாத மீனவர்களுக்கு உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்புக்கு தூண்டில் செயலி பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைத்து மீனவர் களும் செயலியை பயன்படுத்தும் வகையில் மீனவர்கள் மத்தியில் விழிப் புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x