

தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, மக்கள் தம்மைத் தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதாக நெல்லை சம்பவம் குறித்து எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் வசிப்பவர் சண்முகவேல், இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர்.
தனது ஓய்வுக்காலத்தில் தங்கள் சொந்த ஊரின் தோட்டத்து வீட்டில் தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிறு இரவு வீட்டின் போர்டிகோ பகுதியில் சண்முகவேலு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு 2 கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர்.
இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்டு அவர்களை நாற்காலியைக் கொண்டு இரு முதியவர்களும் விரட்டி அடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அனைவராலும் பகிரப்பட்டது.
மேலும், அமிதாப் பச்சன் , ஹர்பஜன் என பிரபலங்கள் பலர் நெல்லை முதியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு வீரதீர விருது அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நெல்லை முதியவர்களுக்கு பாராட்டு தெரிவித்து தமிழக எதிர்க் கட்சித் தலைவரும்
மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "“கொள்ளையர்களைத் துணிவுடன் விரட்டிய, நெல்லை, கல்யாணிபுரத்தின் சண்முகவேல்-செந்தாமரை இணையருக்கு வாழ்த்துகள்!
தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, அரசிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத மக்கள் தம்மைத் தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதை இந்த மூத்த குடிமக்களின் தீரச் செயல் உணர்த்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.