

புதுக்கோட்டை
காவிரி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை வரை வந்துசேரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், சென்னப்ப நாயக்கன்பட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று குடிமராமத்துப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
''மேட்டூர் அணையை நேற்று முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். அப்போது 'இன்றைக்குத் திறக்கப்படும் நீர், கடைமடை வரை சென்றடையும்' என்று தெரிவித்தார். இதற்காகப் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
கடைமடைப் பகுதியான நாவுடி வரை காவிரி நீர் வரவேண்டும். தூர்வாரும் பணிகள் நடைபெற்ற பின், விரைவில் தங்கு தடையின்றி காவிரி நீர் கடைமடை பகுதி வரை வரும்'' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் 100 அடியைக் கடந்தது. அணை வரலாற்றில் 65 வது முறையாக நீர் மட்டம் 100 அடியை எட்டியது.
இதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 13) காலை 8.50 மணிக்கு முதல்வர் பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். வினாடிக்கு 3,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.