Published : 14 Aug 2019 05:34 PM
Last Updated : 14 Aug 2019 05:34 PM

சொந்தமாக ஒரு வீடு வேண்டும்.. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கடைசி வீரரின் கோரிக்கை ஏற்கப்படுமா?

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ படையில் பணியாற்றியவர்களில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கடைசி வீரர், அரசு தனக்கு சொந்தமாக ஒரு வீடு வழங்குமா என்ற ஏக்கத்தில் பாழடைந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

பிரிட்டிஷ்காரர்களிடம் நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையர்களுடன் நேரடியாக போரிட்டு நாட்டின் சுதந்திரத்தை பெற, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளின் உதவியுடன் கிழக்காசிய நாடுகளில் வசித்த இந்தியர்களை திரட்டி, ‘இந்திய தேசிய ராணுவ’ (ஐஎன்ஏ) படையை உருவாக்கினார். அந்த வீரர்களில் அதிகம் இடம் பெற்றவர்கள் தமிழர்கள். நேதாஜியின் படையை பார்த்து பிரிட்டிஷ் அரசாங்கமே பயந்தது.

அப்படிப் போராடிய வீரர்களில் ஒரு சிலரே நாட்டில் உயிருடன் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இருந்தபோதும், தற்போது ஒரே ஒரு ஐஎன்ஏ வீரர் தான் உயிருடன் உள்ளார். அவர்தான் ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் வசிக்கும் சி.எம்.பாண்டியராஜ்(93). இவர் அகில இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் முருகேஸ்வரி மட்டும் தமிழ்நாடு மின்வாரியத்தில் அரசுப்பணியில் உள்ளார். மற்றவர்கள் அனைவரும் வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர்.

சுதந்திர தினம் குறித்து ஐஎன்ஏ வீரர் பாண்டியராஜிடம் கேட்டதும், தனது ஐஎன்ஏ படையின் சீருடையை அணிந்து மிடுக்காக வீட்டின் முன் நடந்து நேதாஜி புகைப்படம் முன் நின்று ஒரு சல்யூட் செய்து, தனது அனுபவங்களை கூறத் தொடங்கினார்.

நாட்டின் சுதந்திரம் பெற வேண்டி கிழக்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் சாதி, மத வேறுபாடின்றி ஐஎன்ஏ படையில் இணைந்தனர். நானும் மலேசியா நாட்டில் எனது தாய், தந்தையுடன் வசித்தபோது, 17 வயதில் 1943-ல் ஐஎன்ஏவில் சேர்ந்தேன். மலேசியாவில் சித்ரா முகாம் உள்ளிட்ட சில இடங்களில் நேதாஜியின் கொரில்லா படையில் பணியாற்றினேன்.

1945-ல் ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதால் ஐஎன்ஏ படைக்கு போதிய ஆயுத உதவி கிடைக்கவில்லை. அப்போது பிரிட்டிஷ் படைகள் மலேசியாவை கைப்பற்றி, எங்களை கைது செய்தது.

6 மாதங்கள் மலேசியா அலோஸ்கா சிறையில் இருந்தேன். சிறையில் பல இன்னல்களை அனுபவித்தோம். ஜப்பானில் அணுகுண்டு வீசப்படவில்லை என்றால், நேதாஜியின் படைகள் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவிற்குள் புகுந்து பிரிட்டிஷாரை ஓட ஓட விரட்டியிருக்கும்.

இது நடக்காமல் போகவே நேதாஜி மனம் தளர்ந்துவிட்டார். அதன்பின் சிங்கப்பூர் வானொலியில் இருந்து எங்களுக்காக உரையாற்றினார். அதில் நண்பர்களே, சகோதரர்களே உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் இணையுங்கள், நான் எங்கு செல்கிறேன் என எனக்கே தெரியவில்லை. எனக்கு மறுபிறவி ஒன்று உண்டு என்றால், நான் ஒரு தமிழராக பிறப்பேன் எனக்கூறிவிட்டுச் சென்றார்.

இதைக்கூறும்போது தியாகி பாண்டியராஜ் கண்ணீர் விட்டு அழுதார். அதன்பின் 1946ல் தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டும் எங்களுக்கு வந்தது.

இவ்வாறு நாங்களெல்லாம் போராடி பெற்ற சுதந்திரத்தை அனைவரும் போற்றிப்பாதுகாக்க வேண்டும். இன்றை இளைய தலைமுறையினருக்கு எங்களின் தியாகங்களைச் சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட எங்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இலவச வீட்டுமனை, வீடு கேட்கிறோம். நானும் கடந்த 16 ஆண்டுகளாக இலவச வீடு கேட்டு மனுக் கொடுத்து வருகிறேன். ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த 55 ஆண்டுகளாக பாழைடைந்த இடியும் நிலையில் உள்ள வாடகை ஓட்டு வீட்டில் வசித்து வருகிறேன். என்னைப்போன்றுதான் பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களும் வறுமையில் வாழ்ந்து வருகின்றன. மாநில அரசின் சுதந்திரப் போராட்ட ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இதை வைத்துத்தான் எங்களத வாழ்க்கை ஓடுகிறது. கடைசி காலத்தில் நாங்கள் நிம்மதியாக வாழ அரசு ஒரு வீடு கட்டிக் கொடுத்தால் நல்லது என வேதனையுடன் தெரிவித்தார்.

நாட்டின் விடுதலைக்காக போராடிய இவரைப்போன்ற தியாகிகளை, கடைசி காலத்தில் மகிழ்ச்சியாக வாழ அரசு வழிவகை செய்யுமா?

- கி.தனபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x