

காவிரி-குண்டாறு திட்டத்தில் ஆட்சியில் இருந்தும் கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.
அவர் காரைக்குடியில் இன்று (ஆகஸ்ட் 14) செய்தியாளர்களை சந்தித்தபோது, "காவிரி - குண்டாறு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், மாநில அரசும் இத்திட்டத்திற்கு நிதி கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் கோதாவரி-மகாநதி, கோதாவரி-கிருஷ்ணா திட்டம் அமல்படுத்திய பின்பே காவிரி-குண்டாறு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளனர். இதன்மூலம் 8 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அதிமுக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை" என்றார்.
தொடர்ந்து அவர், "நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையுடன் பாஜக அரரசு உள்ளது. இதனால் எதை வேண்டுமானாலும் அமல்படுத்தி வருகின்றனர். தனிநபர் சுதந்திரம், மாநில அரசு உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசின் முடிவுகளை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள முடியும். தற்போது அச்சட்டத்தை திருத்தியுள்ளனர். இனி மத்திய அரசுக்கு எதிரான எந்த கேள்வி கேட்டாலும் பதில் வராது.
மருத்துவத்துறையில் முன்னோடி மாநிலம் தமிழகம். ஆனால் மருத்துவ ஆணையத்தில் தமிழகத்திற்கு 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதுவரை யூனியன் பிரதேசத்தை தான் மாநிலமாக மாற்றியுள்ளார்.
தமிழக வரலாற்றை மத்திய அரசு மறைக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன்.
நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச நேரம் தருவதில்லை. லடாக் பாஜக எம்பிக்கு 20 நிமிடங்கள் தருகின்றனர். எங்களது வாதத்தை கேட்டு, சட்டத்தை திருத்தம் செய்ய பாஜக தயாராக இல்லை. ப.சிதம்பரம் குறித்து முதல்வர் பேசியதற்கு, அதிமுகவினரே தங்களது மனசாட்சியை கேட்டு கொள்ளட்டும். வைகோ எங்களை பற்றி தற்போது பேசுவதில்லை. அதனால் நாங்களும் அவரை பற்றி பேசவில்லை" என்றார்.