கி.மகாராஜன்

Published : 14 Aug 2019 16:25 pm

Updated : : 14 Aug 2019 16:38 pm

 

விஏஓக்களின் சொத்து விவரங்களை சேகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை

madurai-high-court

கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களை சேகரிக்கவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் ஏ.காளீஸ்வரி. இவர் திருமணமானவர். முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அரசு ஊழியர் அம்பேத்கார் (இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்தவர்) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

அம்பேத்கார் பணியின்போது உயிரிழந்த நிலையில், கருணை வேலை கேட்டு காளீஸ்வரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். இவருக்கு கருணை வேலை வழங்க அம்பேத்காருக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மகள் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் காளீஸ்வரி கருணை வேலை கேட்டு அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை ரத்து செய்து தனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிடக்கோரி காளீஸ்வரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அரசு ஊழியரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால் முதல் கணவரும், தானும் விவாகரத்து செய்து கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்து ஏ.லெட்சுமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் விவாகரத்து சான்றிதழ் வழங்கியுள்ளார். இதுபோன்ற சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் கிடையாது.

கிராம நிர்வாக அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக தனி பதிவேடு பராமரிக்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள் அதிகளவில் லஞ்சப்புகார்களை சந்திக்கின்றனர். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வழங்குவது வரை கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர். அரசின் நலத்திட்டங்களைப் பெற போலியாக சான்றிதழ் வழங்குகின்றனர்.

இதனால் குற்றங்களின் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தண்டனையை உயர்த்தவும் அரசு ஊழியர்கள் ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளில் உரிய திருத்தம் கொண்டு வர விதிக்குழுவை அரசு அமைக்க வேண்டும்.

வட்டாட்சியர் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்கவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தெரியவந்தால் அதை அவர்களின் பணிப்பதிவேட்டில் குறிப்பிடவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகளை தெரிவிக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் தனி பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Madurai High Courtவிஏஓக்களின் சொத்து விபரம்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author