Published : 14 Aug 2019 03:55 PM
Last Updated : 14 Aug 2019 03:55 PM

காஞ்சி அத்திவரதர் தரிசன காலகட்டத்தை நீட்டிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அதை அரசுதான் முடிவு செய்யவேண்டும் என உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அத்திவரதரைக் காண, தரிசிக்க சில நாட்களே உள்ள நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை ஆகஸ்ட் 17-ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. இதுவரை சுமார் 70 லட்சம் பேர் அத்திவரதரைத் தரிசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசி (75) என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் நேற்று நீதிபதி ஆதிகேசவலு முன் ஆஜராகி முறையீடு செய்தார்.

அவரது முறையீட்டில், “லட்சக்கணக்கானவர்கள் இன்னும் அத்திவரதரைத் தரிசிக்காத காரணத்தால் தரிசன உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், இன்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் என்பவரும் வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே ஒரு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

தற்போது கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது, லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் வருவதால் தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும், ஏற்கெனவே அத்திவரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிக்கப் போவதாக அரசே அறிவித்துள்ள நிலையில் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறைச் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என அறநிலைய துறை அமைச்சரே தெரிவித்துள்ளதாக கூறி நீட்டிக்கும் வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆதிகேசவலு, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்கவேண்டும், இதில் நீதிமன்றம் உத்தரவிடமுடியாது, அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்கை ஏற்கமுடியாது கடைசி நேரத்தில் இதுபோன்ற வழக்கு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்”. என எச்சரித்தார்.

தரிசனத்தை நீட்டிக்க கோரி பொது நல வழக்காக தான் தாக்கல் செய்ய முடியும், ஆகவே மனுதாரர் பொதுநல வழக்காகத்தான் தாக்கல் செய்யவேண்டும், என நீதிபதி தெரிவித்ததை அடுத்து மனுதாரர் மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். மனு திரும்ப பெறப்பட்டதால் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x