செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 13:38 pm

Updated : : 14 Aug 2019 13:38 pm

 

அமெரிக்கா செல்வதால் முதல்வருக்கு நீலகிரி செல்ல நேரமில்லையா?- ஸ்டாலின் கேள்வி

the-effort-to-move-to-the-us-london-no-time-to-go-to-nilgiris-for-cm-stalin

செயல்படாமல் இருக்கும் அதிமுக அரசை செயல்பட வைப்பதே திமுகதான், முதலமைச்சர் – அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, ஏன் சென்று சந்திக்கவில்லை? என ஊடகங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும் என ஸ்டாலின் கேள்வி கூறியுள்ளார்.

கேரளாவில் கனமழையாலும், பெரு வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சென்னை கிழக்கு – தெற்கு – வடக்கு – மேற்கு போன்ற திமுக மாவட்ட அமைப்புகள் சார்பில் நிவாரணப் பொருட்கள் அண்ணா அறிவாலயத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. இதை திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:

“கேரள மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைச் செய்திட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன் அடிப்படையில், நேற்றைய தினம் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும், இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சற்றேறக்குறைய 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து, பல்லவபுரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி சார்பில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிவாரணப் பொருட்கள் எல்லாம் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றது. அவைகள் எல்லாம், இன்றைக்கு கேரள மாநிலத்தில் இருக்கும் திமுக சார்பில் எந்தெந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களோ, இங்கு இருக்கக்கூடிய நிவாரணப் பொருட்கள் பிரித்து வழங்கப்படவிருக்கின்றன.

அதேபோல், கேரள மாநிலத்தின் அருகில் எல்லைப்பகுதியில் இருக்கக்கூடிய ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருக்கக்கூடிய திமுகவைச் சார்ந்த நிர்வாகிகளும் தொடர்ந்து இது போன்று நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்க இருக்கின்றார்கள் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” இவ்வாறு தெரிவித்த அவர் , தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அளித்த பதில்:

நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் இன்னும் போதிய அளவில் ஆய்வு மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போது, முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது, அதுகுறித்து தங்களின் பதில்?

இந்தக் கேள்விகளையெல்லாம், நீங்கள் முதல்வரை நேரடியாக சந்தித்து ஏன் இன்னும் போகவில்லை? என்ன காரணம்? என்று கேளுங்கள். ஒருவேளை அவர், அமெரிக்காவிற்கும், லண்டனிற்கும் செல்ல வேண்டிய முயற்சிக்கான ஏற்பாட்டில் இருக்கலாம். அதனால், இங்கெல்லாம் போவதற்கு அவருக்கு நேரம் இருக்காது என்று நான் கருதுகின்றேன்.

திமுகழகம் சார்பில் கொடுக்கப்படும் 10 கோடி ரூபாய் நிதியால் எதுவும் செய்ய முடியாது. அரசு தானே எல்லாம் செய்யவேண்டும். இது ஒரு விளம்பரத்திற்காக என்று கூறியிருக்கின்றார்களே?

நான் கொடுத்திருக்கின்ற நிதி, ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் கொடுத்தேன் என்று சொல்லவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி மாநிலங்களவை உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி மற்றும் சட்டமன்றத் தொகுதியின் மேம்பாட்டு நிதி போன்று அந்த நிதிகளில் இருந்து தான் 10 கோடி ரூபாய் நிதி என்று கணக்கிட்டு சொல்லியிருக்கின்றேன்.

தற்போது, அரசின் சார்பில் அவர்கள் நிதி ஒதுக்கப்போகின்றார்கள். அந்த நிதியை, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்துவிடுகின்றாரா? இல்லை, மக்களின் வரிப்பணம் அது. மக்களின் வரிப்பணத்தில் தான் இந்த அரசாங்கம் நடக்கின்றது. அந்தப் பணத்தைத் தான் எடுத்து கொடுக்கப்போகின்றார்கள். இதுதான் என்னுடைய பதில்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நீங்கள் விளம்பரத்திற்காக ஆய்வு நடத்தியதாக விமர்சனம் செய்கின்றார்கள். அதுபற்றி உங்களின் கருத்து?

அதைப் பற்றியெல்லாம், நான் கவலைப்படுவது கிடையாது, இன்றைய சூழ்நிலையில் ஆளும் கட்சி செயல்படாமல் இருக்கின்றது. எனவே, ஒரளவிற்கு செயல்பட வைப்பதற்கு திமுகதான் துணை நிற்கின்றது. அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய உண்மை நிலை.

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று சொல் இருக்கின்றார். அதுபற்றிய, கருத்து?

அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை, எங்களுடைய வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்.

இவ்வாறு ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

The effort to move to the USNo time to go to Nilgiris for CMStalinEdappadi palanisamyஅமெரிக்கா செல்ல எடுத்துவரும் முயற்சிநீலகிரி செல்ல நேரமில்லைஸ்டாலின்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author