Last Updated : 14 Aug, 2019 11:06 AM

 

Published : 14 Aug 2019 11:06 AM
Last Updated : 14 Aug 2019 11:06 AM

அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி; கோயில் வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது

காஞ்சிபுரம்

அத்திவரதர் கோயில் வளாகத்திலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தை பிறந்ததால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் வைபவம் நிறைவு பெற இன்னும் 3 நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வரதராஜப் பெருமாள் கோயிலைச் சுற்றி 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நேற்று குவிந்தனர். பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து இளம் பச்சை நிறப் பட்டாடை அணிந்து காட்சியளித்த அத்திவரதரை தரிசித்தனர்.

இதற்கிடையே வேலூர் மாவட்டம், பாணாவரம் பகுதியைச் சேர்ந்த விமலா என்ற கர்ப்பிணிப் பெண், இன்று (புதன்கிழமை) காலை அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தார். அப்போது சுமார் 10 மணிக்கு விமலாவுக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர் அவரைக் கைத்தாங்கலாக மருத்துவ முகாமுக்கு அழைத்து வந்தனர்.

பதினாறு கால் மண்டபம் அருகே உள்ள மருத்துவ முகாமில், அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் கெளதம் மற்றும் செவிலியர் யோகவள்ளி ஆகியோர் பிரசவத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அங்குள்ள மருத்துவ முகாமில் மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன், ஜான்சிராணி, வினோபா ஆகிய மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். இதைத் தொடர்ந்து விமலாவுக்கு 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவர்களுக்கு விமலாவின் கணவர் அசோக் நன்றி தெரிவித்தார். இதையடுத்து விமலாவும் குழந்தையும், அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x