Published : 14 Aug 2019 10:45 AM
Last Updated : 14 Aug 2019 10:45 AM

கொள்ளையரை விரட்டிய தம்பதிக்கு குவியும் பாராட்டுகள் 

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70), தனது மனைவி செந்தாமரையுடன் (65) பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவர் களது 3 பிள்ளைகளுக்கும் திருமண மாகி வெளியூரில் வசிக்கின்றனர்.

கடந்த 11-ம் தேதி இரவு வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த முகமூடி கொள்ளையர் இருவரை, சண்முகவேலுவும், செந்தாமரை யும் தைரியமாக எதிர்கொண்டு விரட்டியடித்தனர். செருப்பு, வாளி, நாற்காலி உள்ளிட்டவற்றை வைத்தே இருவரும் சேர்ந்து அவர்களை விரட்டியடித்தனர். இதில், செந்தாமரையின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் அணிந்திருந்த 35 கிராம் நகையை கொள்ளையர்கள் பறித்துக்கொண்டனர்.

சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகளைக் கொண்டு போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர் களை வயதான தம்பதி விரட்டி அடித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவர்களின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிசிடிவி காட்சியை பதிவிட்டு, மூத்த தம்பதிக்கு ‘சபாஷ்’ என்று கூறி பாராட்டியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், சண்முகவேல்- செந்தாமரை தம்பதியின் வீடியோவை பதிவிட்டு, “திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பார்த்தா அல்லு விடும். என்ன வீரம், பாசத்துக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்ட பார்வை. hats- ohh to the elderly couples off tirunelveli who fought with robbers” என்று அஜித், விஜய் திரைப்பட டைட்டில்களை இணைத்து பதிவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி னார். தம்பதியின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.

துணிந்து தாக்கினேன்

இதுகுறித்து சண்முக வேல் கூறும்போது, “கொள்ளையர்களுக்கு ஏதேனும் காயத்தை ஏற்படுத்திவிட்டால் அடையாளம் கண்டு அவர்களைப் பிடிக்க உதவியாக இருக்கும் என்பதால் துணிந்து தாக்கினேன். ஆனால், அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்” என்றார்.

செந்தாமரை கூறும்போது, “நான் எப்போதுமே தைரியசாலி தான். எனது கணவரை வெட்ட முயன்றனர். இதை பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்? அதனால், தைரியமாக எதிர்கொண்டு போராடினேன். எனது நகை சிக்கியதும் அதை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x