

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் விழாவில் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது. இதனால் பக்தர்களை தங்க வைத்து அனுப்ப பந்தல்கள் அமைக்கப்பட்டதுடன் கார், வேன், தனிப் பேருந்துகள் மூலம் வரும் பக்தர்கள் இந்த பந்தல் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு சிறப்பு பேருந்துகள் மூலம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் வைபவம் நிறைவு பெற 3 நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வரதராஜப் பெருமாள் கோயிலைச் சுற்றி 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நேற்று குவிந்தனர். பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து இளம் பச்சை நிறப் பட்டாடை அணிந்து காட்சியளித்த அத்திவரதரை தரிசித்தனர்.
காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதி யில் வேலூர், அரக்கோணம் மார்க்கத்தில் வரும் பொதுமக்கள் தங்குவதற்கு ஓர் தற்காலிக பந்தலும், வந்தவாசி, உத்திரமேரூர் சாலையில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஓர் தற்காலிக பந்தலும், செங்கல்பட்டு, வாலாஜாபாத் பகுதியில் வரும் மக்கள் தங்குவதற்கு மற்றும் ஓர் தற்காலிக பந்தலும் அமைக்கப்பட்டுள்ளன.
கார், வேன் மற்றும் தனிப் பேருந்துகளில் வரும் பொதுமக்கள் இந்த தற்காலிக பந்தல் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு பந்தலில் காத்திருக்க வேண்டும். அங்கிருந்து சிறப்புப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு கோயில் அருகே விடப்படுகின்றனர். அந்த தற்காலிக பந்தல்களில் காத்திருக்கும் பக்தர் களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் விஐபி, விவிஐபி
அத்திவரதர் தரிசனம் 3 நாட் களில் நிறைவடைய உள்ளதால் விஐபி, விவிஐபி நன் கொடையாளர் அனுமதி அட்டை பெற்றவர்கள் பலர் மொத்தமாக வரத் தொடங்கியுள்ளனர். இத னால் விஐபி வரிசையில் தரிசனத் துக்காக 7 மணியில் இருந்து 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதில் சிலர் தரிசிக்காமலே திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. எனவே விஐபி நன்கொடையாளர் அனுமதி அட்டை வைத்திருந்தோரில் சிலர் விஐபி தரிசனத்தைவிட பொது தரிசனத்தில் பார்ப்பதே எளிதானது என்று கூறினர். விவிஐபி நன் கொடையாளர் அனுமதி அட்டை வைத்திருந்தோர் நேற்று 3 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.