Published : 13 Aug 2019 05:55 PM
Last Updated : 13 Aug 2019 05:55 PM

பாசத்துக்கு முன்னாடி பனி; பகைக்கு முன்னாடி புலி: கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய முதியவர்கள் குறித்து ஹர்பஜன் ட்வீட்

பாசத்துக்கு முன்னாடி பனி. ஆனால், பகைக்கு முன்னாடி புலி என்று கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய முதியவர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவரது மனைவி செந்தாமரை (65). இவர்கள், தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுடைய பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, சண்முகவேல், செந்தாமரை மட்டும் அங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிறு இரவு) வீட்டின் போர்டிகோ பகுதியில் சண்முகவேலு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு 2 கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர்.

இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்டு அவர்களை நாற்காலியைக் கொண்டு இரு முதியவர்களும் விரட்டி அடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அனைவராலும் பகிரப்பட்டது.

மேலும், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நெல்லை முதியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் ஹர்பஜன் பதிவிடுகையில், ''திருட்டுப் பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும் .என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி. பகைக்கு முன்னாடி #புலின்னு சொல்ற மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் #நேர்கொண்டபார்வை.

திருடர்களுக்கு எதிராகப் போராடிய திருநெல்வேலியின் முதியவர்களுக்குத் தலை வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x