

அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
''அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களான தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 40 -லிருந்து 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் அப்பகுதியில் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணிநேரத்தில் கோவை சின்னக்கல்லாறு, சோலையூரில் 4 செ.மீ. மழையும், கோவை மாவட்டம் வால்பாறை நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 2 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் ஜன.1 முதல் நேற்றைய நிலவரப்படி பெய்ய வேண்டிய மழை 23 செ.மீ. தற்போது 25 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 9 சதவீதம் அதிகம். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் ஜன.1 தொடங்கி நேற்றுடன் பெய்ய வேண்டிய மழை அளவு 16 செ.மீ. ஆனால் 13 செ.மீ மழை பெய்துள்ளது. இது 19 சதவீதம் குறைவு.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸும் பதிவாக வாய்ப்புள்ளது’’.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.