

ஆர்.டி.சிவசங்கர்
பவானி பிறக்கும் ஊரில், `மினரல் வாட்டர்' விற்பனையை எண்ணி ஆதங்கப்படுவதா? பவானியே எமனாக மாறியதற்காக அழுவதா? சாலைகளுக்காக கோடிக் கணக்கில் செலவு செய்யும் சூழலில், சோலைகளுக்காக சில லட்சங்களைக்கூட செலவு செய்யாததற்காக வேதனைப்படுவதா? இப்படி பல கேள்விகள், நீலகிரி மக்களின் கண்ணீரோடு கலந்திருக்கின்றன.
நீலகிரியை சுற்றுலா மாவட்டமாக வைத்திருக்க, உள்ளூர் மக்கள் கொடுத்த விலை அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் இருமுறை நீலகிரியைப் புரட்டிப் போட்டுள்ளது பேரிடர். முதல்முறை 43 பலிகள். தற்போது இதுவரை 7 பேர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இறப்பு குறைந்திருந்தாலும், இயற்கையழகு சூறையாடப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர் உள்ளூர் மக்கள்.
இந்த நிலையில், நீலகிரி சுற்றுலா மண்டலம் அல்ல சூழல் மண்டலம் என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களாக பெய்த கனமழை 2,400 பேரை வீட்டிலிருந்து வெளியே விரட்டியிருக்கிறது. 50 கிராமங்களைச் சுற்றிவளைத்து, மக்களை அச்சுறுத்தியுள்ளது. கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகியிருப்பதால், தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டியான நீலகிரிக்கு `ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருக்கிறது.
வீடிழந்தவர்களும், வெள்ள அபாயப் பகுதியைச் சேர்ந்தவர்களும் அரசுப் பள்ளிகளிலும், சமுதாயக் கூடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பள்ளி மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
சூழல் துரோகத்துக்கான விலை? இது தொடர்பாக சூழல் ஆர்வலரும், அரசு கலைக் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியருமான போ.மணிவண்ணனிடம் பேசினோம். "நீலகிரி மண்ணுக்கு மனிதர்கள் செய்த சூழல் துரோகத்துக்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். காட்டுக்குள் காட்டேஜ்கள், நகரத்தில் அடுக்குமாடிகள், விலங்குகளின் வலசை மாற்றம், வனக் கொள்ளை, புல்வெளி நாசம், ஆழ்குழாய்க் கிணறுகள், ரியல் எஸ்டேட், பணப் பயிர் விவசாயம், வன வாழ்வியல் அழிவு என மண்ணுக்குச் மனிதர்கள் செய்த துரோகத்தின் பட்டியல் பெரிது.
இதனால், வட்டியும், முதலுமாக பாடம் கற்பிக்கிறது இயற்கை. பள்ளத்தாக்குகளும், சரிவுகளும், பெரும் மலைச்சிகரங்களும் மிகுந்திருக்கும் நீலகிரியில் பெய்த மழை, இன்னும் வடியாமல் இருப்பதுதான் புவியியல் ஆச்சரியம். நதி வழித்தடங்கள் முற்றிலுமாய் கான்கிரீட் காடுகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இனியும், இதை கவனிக்காவிட்டால், கடுமையான நிலச் சரிவையும், மண் வெடிப்பையும் சந்திப்போம். ஒரு குளிர் பிரதேசத்தை வெப்ப மண்டலமாக மாற்றியதே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இயல்பான வாழ்வுக்கு அச்சுறுத்தல் உருவானது.
புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், பெரிய காடுகளால் ஆன இந்தப் பிரதேசம், பழங்குடி
களின் கட்டுப்பாட்டில் இருந்தவரை சொர்க்கமாகத்தான் இருந்தது.
இதை வணிக நிலப் பரப்பாக மாற்றிய பிறகுதான், அழகிய இப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகி வருகிறது. ஆனால், இதன் விளைவுகளை தினக்கூலிகளும், ஏழை மக்களுமே அனுபவிப்பது பெரிய சோகம். பகல் முழுவதையும் தேயிலைத் தோட்டத்தில் செலவிட்டு, ரூ.200, ரூ.400 என குறைந்த கூலியைப் பெற்று, பசியாறும் சாமானியர்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டிருக்கிறது கனமழை. நீலகிரியை சுற்றுலா மிகுந்த, உல்லாசபுரியாக மட்டுமே பார்ப்பது ஆபத்தானது. ஆசியாவின் சூழல் மண்டலமாகப் பார்க்கும் அறிவுப் பார்வையே அவசியம். இப்போதிருக்கும் சூழலை ஆராய்ந்து, தொலைநோக்குப் பார்வையுடன், சுற்றுலா தலம் என்ற தகுதியை நீக்கினால் மட்டுமே இயற்கையின் தாய்மடி தப்பிப் பிழைக்கும்.
வெளியூர்க்காரர்கள் நீலகிரியில் நிலங்களை குத்தகைக்கு வாங்கி, நீர்வழித் தடங்களை மாற்றியமைப்பதும், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக்கொள்வதும், புல்வெளிகளாக இருந்த மேய்ச்சல் நிலங்களை மாற்றியமைத்ததும் நீலகிரியின் ஈரப்பதத்தை அழித்துவிட்டது. இங்கிருக்கும் நீர்வஞ்சி மரங்கள் பூமிக்கடியில் வடியும் தண்ணீரை உறிஞ்சித் தருகின்றன. ஆனால், இவற்றை அழித்துவிட்டு, ஆழ்குழாய்க் கிணறுகளால் மண்ணைத் துளைத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த, பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிச் செடிகள் இரவோடு இரவாக மழையால் அழிந்துவிட்டன. நகர்மயமாக்கல் திட்டம் நேரடியாக கிராமங்களையும், மறைமுகமாக இயற்கையையும் பதம் பார்க்கிறது. உதகை, பழங்குடிகளின் தாய் நிலம். பறவைகள், விலங்குகள், அருவிகள், நதிகள், மரங்கள், மலர்கள் மிகுந்த அழகிய பிரதேசம். பல நூறு ஆண்டுகளாக பழங்குடிகள் இயற்கையுடன் கைகோர்த்து, இதைப் பராமரித்து வந்தனர்.
ஆனால், பழங்குடிகளைப் புலம் பெயரவைத்து, புதுக் குடிகளைக் குடியேற அனுமதித்து, இயற்கையை உயிருடன் புதைத்துக் கொண்டிருக்கிறோம். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். நீலகிரி - சுற்றுலா மண்டலம் அல்ல; சூழல் மண்டலம் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.