Published : 13 Aug 2019 03:32 PM
Last Updated : 13 Aug 2019 03:32 PM

அச்சுறுத்திய நுரையும்... நிரந்தரத் தீர்வும்!

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை ஒண்டிபுதூர் அருகேயுள்ள பட்டணம்புதூர் பகுதியில், நெசவாளர் காலனி அருகேயுள்ள நொய்யலாற்றுத் தடுப்பணையில் திடீரென நுரை பொங்கி வழிந்தது. காற்றில் பறந்து வந்த நுரை, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது படிந்தது. இதனால் அப்பகுதியில் செல்வோர் அச்சத்துக்குள்ளானார்கள்.

"தடுப்பணை அருகே அதிக அளவு கழிவுநீர் கலக்கப்படுவதால், தடுப்பணையைத் தாண்டி வரும் நீரில் நுரை பொங்கி, காற்றில் பறக்கிறது. இதனால், அவ்வழியே செல்வோருக்கு கை, கால்களில் அரிப்பு ஏற்படுகிறது. நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, "நுரை பொங்கும் இடத்தில் நீர் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வறிக்கை கிடைத்த பிறகே, அதிக நுரை பொங்குவதற்கான காரணம் தெரியவரும். முதல்கட்ட ஆய்வில், அந்த நீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என்றனர்.

கோவையில் இப்படி என்றால், திருப்பூரில் பல நீர்நிலைகளில் அவ்வப்போது நுரை பொங்கித் ததும்பும். பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளித்தாலும், இந்த நுரை ஆபத்து நிறைந்ததுதான். "ரசாயனக் கழிவுநீர், நீராதாரங்களில் கலக்கும்போது இவ்வாறு நுரை உண்டாகிறது. எனினும், இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு இருக்கிறது" என்கிறார் கோவை மனுநீதி அறக்கட்டளைத் தலைவர் மனுநீதி மாணிக்கம். "கோவையில் தொடர் மழையால் நொய்யலாற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இந்த நிலையில், ஆற்றில் ஓடும் நீரில் நுரை பொங்கியது, மக்களை அச்சத்துக்குள்ளாக்கியது.

சில இடங்களில் 10 அடி உயரத்துக்கு நுரை பறந்துசென்றது. இருகூர் தடுப்பணை மற்றும் நல்லம்மன் தடுப்பணைப் பகுதிகளில்தான் அதிக நுரை தோன்றியுள்ளது.
தண்ணீரில் சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனக் கழிவுகள் ஆற்று நீரில் கலந்து, தடுப்பணையில் நீர்வீழ்ச்சியின் காரணமாக நுரையை உருவாக்கியுள்ளது. இந்த சோப்பு கலந்த நீர் கால்நடைகள் குடிப்பதற்கோ, விவசாயம் செய்யவோ ஏற்றதல்ல. கால்நடைகள், பயிர்களுக்கு இந்த நுரை ஆபத்தை ஏற்படுத்தும். நிலத்தடி நீரையும் மாசுபடச் செய்யும்.

சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகள்தான், நுரைக்கு காரணம். பொதுவாக, ரசாயனக் கழிவுகளை சேகரித்து வைத்துள்ள சில தொழிற்சாலைகள், ஆற்றில் தண்ணீர் வரும்போது, ஏற்கெனவே தேக்கி வைத்துள்ள கழிவுகளை, தண்ணீரில் திறந்துவிடுகின்றன. இந்தக் கழிவுநீர் ஆற்று நீரில் கலந்துவிடுகிறது.
துணி துவைக்கும் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், பாத்திரங்களை கழுவும் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், சாயங்களைக் கையாளும் நிறுவனங்கள் உள்ளிட்டவை வெளியேற்றும் கழிவுகள் தண்ணீரில் கலந்து, வேகமாகச் செல்லும் தண்ணீரால் நுரையை உண்டாக்குகின்றன. இதில் உள்ள ரசாயனப் பொருள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டது.

மனுநீதி அறக்கட்டளையும், மேக் இந்தியா நிறுவனமும் இணைந்து, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டறிந்துள்ளன. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தொழில்நுட்ப உதவியுடன், நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை உபயோகப்படுத்தி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. ரசாயனக் கழிவுகளை தேக்கிவைத்துள்ள தொழிற்சாலைகள், இந்த நுண்ணுயிரிகள் அடங்கியுள்ள கரைசலை ரசாயனக் கழிவுகள் தேக்கிவைக்கப்பட்டுள்ள தொட்டியில் செலுத்தும்போது, அந்த நுண்ணுயிரிகள் பெருகி, கழிவுகளில் உள்ள ரசாயனத்தை தின்றுவிடும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வெளிவரும் தண்ணீரை ஆற்றில் விட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. மேலும், பாசனத்துக்குக்கூட அந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

தேக்கிவைக்கப்பட்டுள்ள சாயக்கழிவுகளுக்கும், இதுபோன்ற சுத்திகரிப்புத் தொழில்
நுட்பத்தைக் கண்டறிந்துவைத்துள்ளோம். இது தொடர்பாக தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கு, தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவும் தயாராக உள்ளோம். ரசாயனக் கழிவுகளால் நீராதாரங்களையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாழ்படுத்தாமல் இருக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்" என்றார் மனுநீதி மாணிக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x