செய்திப்பிரிவு

Published : 13 Aug 2019 15:25 pm

Updated : : 13 Aug 2019 15:25 pm

 

ஊறுகாய், காபி, டீ கிடையாது! - கோவையில் ஓர் ஆச்சர்ய இயற்கை உணவகம்

an-amazing-natural-restaurant-in-goa

ஆர்.கிருஷ்ணகுமார்

அந்த ஹோட்டலில் ஊறுகாய், எண்ணெயில் பொறித்த அப்பளம் கிடையாது. மைதா, வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதில்லை. காபி, டீ கூட கிடையாது. அவ்வளவு ஏன்? கெட்டித் தயிர்கூட கிடையாது. ஆனாலும், வாடிக்கையாளர்கள் இந்தக் கடையை தேடிவந்து சாப்பிட்டுப் போகிறார்கள். அப்படி என்ன விசேஷம் இந்த ஹோட்டலில்? உடலுக்கு கேடு விளைவிக்கும் எதுவுமே இங்கு பயன்படுத்தப்படுவதில்லை, முற்றிலும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தியே சமைக்கிறார்கள் என்பதே வாடிக்கையாளர்கள் நாடி வருவதற்கு முக்கியக் காரணம்?

கோவை சாய்பாயா காலனி நாராயணகுரு சாலையில் உள்ள `லஷ்மி சங்கர் மெஸ்சை' தேடிச் சென்றபோது, இன்முகத்துடன் வரவேற்றார் அதன் உரிமையாளர் கோமதி சங்கரலிங்கம் (68). நம்மாழ்வார் வழிநடக்கும் அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்.
"பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள காடல்குடி கிராமம். பெற்றோர் சங்கரலிங்கம்-மகாலட்சுமி. அப்பா கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். நாங்கள் 4 குழந்தைகள். காடல்குடி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளத்தில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, குருவிகுளத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். ஆனாலும், ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை.
1971-ல் கோவில்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக சேர்ந்தேன். 1975-ல் திருமணம். மனைவி வேதவள்ளி, மகள்கள் லஷ்மி, வடிவுக்கரசி, செண்பகவள்ளி, மகன் மணிசங்கர் குமார்.

ஆசிரியப் பணி...

1977-ல் விளாத்திகுளத்தில் அப்பா-அம்மா பெயரை இணைத்து `லஷ்மி சங்கர்' என்ற பெயரில் ஹோட்டல் தொடங்கினேன். 1986-ல் அயன் பொம்மியாபுரம் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் வேலை கிடைத்தது. 2003-ல் கோவில்பட்டியில் ஒரு ஹோட்டல் தொடங்கினேன். ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, ஹோட்டல் தொழிலில் முழு கவனம் செலுத்தினேன்.

2009-ல் மகளின் கல்லூரிப் படிப்புக்காக கோவைக்கு குடிபெயர்ந்தோம். அப்போது, யோகா, தியானப் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன். ஈஷா யோகா மையம், ஆழியாறு அறிவுறுத் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு யோகா, தியானப் பயிற்சிக்குச் சென்றபோது, இயற்கை உணவின் மகத்துவம் புரிந்தது. அதேபோல, இயற்கை மருத்துவம் குறித்தும் பயிற்சி எடுத்தேன்.

பாரம்பரிய விவசாயக் குடும்பம் என்பதாலும், ஹோட்டல் தொழிலில் முன் அனுபவம் இருந்ததாலும், கோவையில் ஒரு ஹோட்டல் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது. அதேசமயம், உடல் நலனுக்கு கேடுவிளைவிக்கும் எதையுமே மக்களுக்கு கொடுக்கக்கூடாது என்று உறுதிபூண்டேன்.
2010-ல் தடாகம் சாலையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் ஹோட்டல் தொடங்கினேன். அந்த இடத்தை காலி செய்யுமாறு கூறியதால், 2016-ல் சாய்பாபா காலனி நாராயண குரு சாலைக்கு ஹோட்டலை மாற்றினேன்.

பனியார சட்டியில் வடை...

மைதா, வெள்ளை சர்க்கரையை முற்றிலும் பயன்படுத்துவதில்லை. அதேபோல, எண்ணெயில் எதையும் பொறிப்பதில்லை. வடையைக்கூட பனியார சட்டியில்தான் தயாரிக்கிறோம். காபி, டீ கூட விற்பது கிடையாது.
சிறு தானியங்களான வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகியை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். பொங்கல், பாயாசம், தோசை, அடை, பனியாரம், கொழுக்கட்டை என அனைத்தும் சிறுதானியங்களில்தான் தயாரிக்கிறோம். மதியம் சாப்பாட்டுக்கு வழக்கமான அரிசி, இயற்கை அரிசி மற்றும் சிறுதானியம் என்று 3 வகைகளில் சோறு தயாரிக்கிறோம். அப்பளத்தை எண்ணெயில் பொறிப்பதில்லை.

சுட்ட அப்பளம்தான் வழங்கப்படும். ஊறுகாய், கெட்டித் தயிர் கிடையாது. பாக்கெட் பாலை வாங்குவதில்லை. மாடு வைத்திருப்பவர்களிடமிருந்து தேவையான பாலை வாங்கிக் கொள்கிறோம்.
பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, முடக்கத்தான், தூதுவளை, பாலக்கீரை, பருப்புக்கீரையில்தான் ரசம், சூப் தயாரிக்கிறோம். வெண்பூசனி, புடலங்காய், பீர்க்கங்காய், கேரட், பீட்ரூட், முளைகட்டிய பயறு வகைகள் கொண்டு சாலட் தயாரித்து வழங்குகிறோம். தானிய தோசை, கீரை தோசைக்கு அதிக வரவேற்பு உள்ளது.

உளுந்தங்களி, வெந்தயக்களி...

அரிசி, காய்கறிகள் என அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைகளையே வாங்குகிறோம். இதற்காக இயற்கை விவசாயிகளுடன் இணைந்துள்ளோம். இரவில் சிறுதானிய கொழுக்கட்டை, பனியாரம், சேவை, உளுந்தங்களி, வெந்தயக்களி, ராகி களி, ராகி புட்டு, சிகப்பரிசி புட்டு என உடலுக்கு கேடு விளைவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே வழங்குகிறோம்" என்றார் பெருமிதத்துடன் கோமதி சங்கரலிங்கம்.
இந்த மெஸ்ஸில் ஆங்காங்கு சிறு தானியங்களின் வகைகள், அவற்றின் பயன்கள், உணவு தொடர்பான திருக்குறள்கள், நல்ல கருத்துகள் எழுதப்பட்டுள்ளன. பாரம்பரிய, இயற்கை உணவின் நன்மைகள் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட போர்டுகள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன.

"ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான உணவு உள்ளது. அந்தந்த நிலத்தின் தன்மைக்கேற்ப உணவுகளை சாப்பிட்டவரை, நோய்களின் தாக்கம் குறைவாக இருந்தது. அப்பகுதியில் விளையும் விளைச்சலைப் பொறுத்தே, உணவின் தன்மையும் இருக்கும். ஆனால், நாகரிகம் என்ற பெயரில், வெளிமாநில, வெளிநாட்டு உணவுப் பழக்கங்களை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கினோம். கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டோம். இதன் பலன், ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்தது. மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை!

`உணவே மருந்து; மருந்தே உணவு' என்று நம் முன்னோர் சொன்னதை காற்றில் பறக்கவிட்டோம். இயற்கை உணவு, மருத்துவப் பயிற்சியில் இதையெல்லாம் உணர்ந்தேன். அதனால்தான், மக்களுக்கு கொஞ்சமும் தீமை விளைவிக்காத உணவையே வழங்குகிறேன். இதனால், எனக்கு பெரிய லாபம் இல்லை. உண்மையைச் சொல்வதானால், பல மாதங்கள் கையைக் கடிக்கும் நிலையே உள்ளது. `டீ, காபிகூட விக்கலைனா எப்படிங்க ஹோட்டல் நடக்கும்' என உறவினர்களே கேள்வி எழுப்பினர்.

ஆனாலும், நான் மாறத் தயாராக இல்லை. மக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் எதையும் வழங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். தற்போது மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை, பாரம்பரிய உணவு, ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. கோவையில் சிறுதானிய உணவை அறிமுகப்படுத்தியது நாங்கள்தான். தற்போது பலரும் சிறுதானிய உணவு விற்பனையைத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இயற்கை விளைபொருள், மரச்செக்கு எண்ணெய் என தேடித்தேடி வாங்குகிறோம். மக்களின் ஆதரவு இன்னும் அதிகம் இருந்தால், உற்சாகமாக செயல்பட உதவும்.

இயற்கை மருத்துவர் கு.சிவராமன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் என பலரும் இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு, பெரிதும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, 2010-ல் நம்மாழ்வார் இங்கு வந்து சாப்பிட்டு, பாராட்டிச் சென்றதை வாழ்நாளில் மறக்க முடியாது" என்றார் நெகிழ்ச்சியுடன் கோமதி சங்கரலிங்கம்.

ஊறுகாய்காபிடீஆசிரியப் பணிஇயற்கை உணவகம்சட்டியில் வடைஉளுந்தங்களிவெந்தயக்களி

Popular Articles

You May Like

More From This Category

More From this Author