

சமூக ஊடகங்களில் வதந்திகளையும், தவறான தகவல்களையும் பரப்புவதற்குப் பதிலாக, நல்ல விஷயங்களைப் பகிருங்கள் என்றார் கவிஞர் வைரமுத்து.
வைரமுத்துவின் `தமிழாற்றுப் படை' புத்தக அறிமுக விழா கோவையில் நடைபெற்றது. வெற்றித் தமிழர் பேரவை என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிர்வாகி எம்.என்.சுகுமார் தலைமை வகித்தார்.
கோவை கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி முன்னிலை வகித்தார். கங்கா மருத்துவமனை தலைவர் சண்முகநாதன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, `விஜய் பார்க் இன்' ஹோட்டல் தலைவர் கோவை ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் வைரமுத்து பேசும்போது, "கோவை மக்கள் மிகவும் மாறுபட்ட தன்மை கொண்டவர்கள். சர்வதேச அளவில் தொழில், கல்வி, மருத்துவத்தில் சிறந்தவர்கள். கோவை மக்களின் மொழி சிறப்பு மிகுந்தது.
தமிழாற்றுப் படை நூலை எழுத எனக்கு நான்கு ஆண்டுகளானது. தமிழர்கள் வீரம், மரியாதை, மானம் மிகுந்தவர்கள். தமிழைக் காப்பாற்ற என்ன வழி என்பதை 3,000வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட தொல்காப்பியம் தெரிவிக்கிறது. தமிழை வாசிக்க வாசிக்கத்தான் அதன்மீதான காதல் அதிகரிக்கும். உலகில் மாறாத மொழியாகத் திகழ்கிறது தமிழ்.
ஆனால், தற்போது சில பள்ளிகள் தமிழில் பேசினால் அபராதம் விதிப்போம் என்று மாணவர்களை எச்சரிக்கின்றன.
தமிழைப் பேசினால் தண்டிப்போம் என்று கூறும் நிறுவனங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. தமிழை மொழியாகக் கருதாமல், தமிழர்களின் அடையாளமாக கருத வேண்டும். தமிழிலேயே உரையாடுங்கள். தமிழில் பேசினால் தமிழர் பண்பாடு வளரும். தமிழின் உரிமையைக் காக்க, அனைவரும் முன்வர வேண்டும்.
நல்ல விஷயங்களை மட்டும் சமூக ஊடகங்களில் பகிருங்கள்.
மக்களுக்கு நன்மை பயக்கும் தகவல்களை மட்டும் பரப்புங்கள். வதந்திகளையும், தவறான கருத்துகளையும், சொந்த விஷயங்களையும் பரப்புவது சரியான போக்கு அல்ல. சமூக ஊடகங்கள் மூலம் ஞானத்தையும், கல்வியையும், அறிஞர்களையும் பாராட்ட வேண்டும். சிலரைத் தூற்றுவதற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்த கூடாது" என்றார் வைரமுத்து.