

சென்னை
முதல்வர் பழனிசாமி போன்று பொறுப்பிழந்து கீழ்த்தரமாகப் பேசமாட்டேன் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை), கேரளாவில் கனமழையாலும், பெரு வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மேற்கு மாவட்ட திமுக சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் பேசியதாவது:
"கேரள மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் கடும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, இதுகுறித்து நான் திமுகவின் சார்பில் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
அந்த வேண்டுகோளை ஏற்று இன்று முதற்கட்டமாக, சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் கேரள மாநிலத்திற்காக, அங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 400 மூட்டை அரிசி 1,880 புடவைகள், 1,185 லுங்கிகள், 800 பெட்சீட்கள், 500 மில்லியன் கொண்ட 2,000 வாட்டர் பாட்டில்கள், 8 பெரிய பெட்டி அளவில் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 38 டிபன் பாக்ஸ்கள் என ஏறக்குறைய 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அறிவாலயத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து இதுபோன்ற நிவாரணப் பொருட்கள் வர உள்ளன.
கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய திமுக நிர்வாகிகளை நான் சென்னைக்கு அழைத்த காரணத்தினால், இன்று அவர்கள் எல்லோரும் வந்திருக்கின்றனர். எனவே, நிவாரணப் பொருட்கள் அனைத்தையும் இன்றோ அல்லது நாளையோ ரயில் மூலமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை திமுக முன்னின்று செய்துகொண்டிருக்கின்றது", என ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, பல ஆண்டுகளாக, மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. பூமிக்கு பாரம் என்று முதல்வர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "முதல்வர், அவர் தகுதிக்கு மீறி, நேற்று நீலகிரி சென்று வந்த என்னைப் பற்றி 'சீன்' காட்ட, விளம்பரத்திற்காகப் போனேன் என்று சொன்னார். அவர் அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் செல்வதாக ஒரு செய்தி வந்திருக்கின்றது. எனவே, அவர் அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் 'சீன்' காட்டத்தான் செல்கின்றாரா? என்று சொல்வதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனால், முதல்வராக இருக்கக்கூடிய ஒருவர், அவரை மாதிரி ஒரு பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவதற்கு நான் நிச்சயம் முயலமாட்டேன்.
அதுமட்டுமல்ல, நேற்றைய தினம், கோவைக்கு வந்திருக்கின்றார். அப்போது, அருகில் தான் ஊட்டி இருக்கின்றது நியாயமாக அவர் அங்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அவர் போகவில்லை. இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. முதலில் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். அதன்பிறகு, நான் பதில் சொல்கின்றேன்", என ஸ்டாலின் தெரிவித்தார்.