Published : 13 Aug 2019 02:08 PM
Last Updated : 13 Aug 2019 02:08 PM

சாதிக்கயிறுகள், கைப்பட்டைகள் அணியும் மாணவர்கள்: தகுந்த நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே சாதியப் பாகுபாடுகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் பயிற்சியின் போது, தெரிந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில், அரசின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள், சாதிக்குறியீடு கொண்ட கைப்பட்டைகளை அணிந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி வண்ணக் கைப்பட்டைகளை சாதிகளுக்குத் தகுந்தபடி மாணவர்கள் அணிவதுடன், சாதியை வெளிப்படுத்தும் வகையில் வளையங்கள் மற்றும், நெற்றியில் பொட்டு வைப்பதும் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடையாளங்கள், விளையாட்டு வீரர் தேர்வு, உணவு இடைவேளை மற்றும், பள்ளி ஓய்வு நேரங்களில் ஒன்று கூடவும், பயன்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க மாணவர்களால் பின்பற்றப்படும் இந்த நடைமுறைக்கு செல்வாக்குமிக்க சில சாதியத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், இளம் இந்திய ஆட்சிப் பணி பயிற்சி அதிகாரிகள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இத்தகைய பள்ளிகளை அடையாளம் கண்டு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சாதியப் பாகுபாடுகளைக் காட்டும் மாணவர்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கவும், அவ்வாறு செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை தொடர்பாக என்எஸ்எஸ் இணை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்பவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x