Published : 13 Aug 2019 01:13 PM
Last Updated : 13 Aug 2019 01:13 PM

காலநிலை அவசரம் குறித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுவோம்: அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மழை, வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் காலநிலை அவசரம் குறித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை விமான நிலையத்தில் பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில், "மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கேரளாவில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கர்நாடகவில் கிட்டத்தட்ட 30 முதல் 40 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம் காலநிலை மாற்றம். இதைத்தான் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போதைய நிலைமை காலநிலை மாற்றத்தில் இருந்து காலநிலை அவசரத்திற்குச் சென்றுள்ளது. உலக நாடுகளில் காலநிலை அவசரத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொண்டிருக்கிறார்கள்.

வருங்காலத்தில் இது போன்ற பெரும் வெள்ளம், கடுமையான வறட்சி என மாறி மாறி வர இருக்கிறது. இதற்கேற்ப மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெள்ளத்தால்தான், நிலச்சரிவால்தான் இறந்தனர் என்று சொல்வதினால் எந்த ஒரு பயனும் இல்லை இனி வரும் காலங்களில் உயிரிழப்பு ஏற்படக் கூடாது. அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இனி இதைவிட மோசமான பேரிடர்கள் வர உள்ளன.

கிராமசபையைக் கூட்டுவோம்...

கேரளாவில் வெள்ளம், கர்நாடகாவில் வெள்ளம், மும்பையில் வெள்ளம், அசாமில் வெள்ளம். ஆனால் தமிழ்நாட்டில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. இதைத்தான் இனிவரும் காலத்தில் பார்க்க இருக்கின்றோம்.

வருகின்ற சுதந்திர தினம் அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளையும் கூட்டி காலநிலை அவசரத்தைப் பற்றி ஒரு தீர்மானம் போட்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கிராம சபையும் விவாதம் செய்து காலநிலை அவசரம் பற்றி ஒரு தீர்மானம் போட வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு வாதம் செய்து ஊராட்சிகளில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இனி வரும் காலத்தில் வெள்ளம் வந்தால், வறட்சி வந்தால் என்ன செய்யலாம் என்று கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

என்ன செய்கிறது காவிரி மேலாண்மை வாரியம்?

காவிரியில் தண்ணீர் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கின்ற காலம் 8 ஆண்டுகள் முன்பு நடந்தது. இப்போது மேட்டூர் அணை இன்று (ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி) திறக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டு காலமாக குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. அதனால் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். என்னுடைய கேள்வி காவிரி மேலாண்மை ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் நிரம்பி பிறகு உபரி நீரைத்தான் தமிழ்நாட்டிற்குக் கொடுக்கின்றனர்.

அதாவது கர்நாடகத்தில் மழை பெய்ய இருக்கிறது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கர்நாடக அணைகள் நிரம்பும் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது ஒரே நாளில் இரண்டரை லட்சம் டிஎம்சி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீரின் மூலம் இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்ற சூழல் உள்ளது.

இதனால் அதன் பிறகு வருகின்ற தண்ணீர் எல்லாம் கடலில் கலக்கின்ற சூழல் இருக்கும் கடந்த ஆண்டு 130 முதல் 140 டிஎம்சி நீர் கடலில் கலந்திருக்கிறது.

கர்நாடகா நமக்குத் தர வேண்டியது நீர் 172 டிஎம்சி. ஒரு வார காலத்திற்குள் கொடுத்து விடுவார்கள். ஆனால், நமக்குத் தேக்கி வைக்கின்ற சூழ்நிலை இல்லை. தடுப்பணைகள் இல்லை. அதை ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ப காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா, தமிழ்நாட்டில் காவிரிப் படுகைகளில் உள்ள அனைத்து அணைகளும் அதன் கட்டுப்பாட்டில் வைத்து மழைக்காலத்துக்கு முன்பே கர்நாடகவில் இருந்து நீரை வெளியிட்டு விவசாயிகள் நலனுக்கு ஏற்றார்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்:

தமிழ்நாட்டில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. தற்போது வருகின்ற தண்ணீரையும் சேர்த்து வைக்க இடமில்லை என வைகோ கூறியது பற்றிய கேள்விக்கு, "இது திடீர் நடவடிக்கை கிடையாது இரண்டு கட்சிகளும் 50 ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கின்றார்கள். இதைத் தான் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள், இன்னும் அணைகள் கட்டுங்கள், தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரியில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டரிலும் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

வைகை ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். தாமிரபரணியில் 2 நாள், பாலாறு பாதுகாப்போம் என 2 நாள், காவிரியைப் பாதுகாப்போம் என 3 நாட்கள் விழிப்புணர்வு மேற்கொண்டேன்.

காவிரிப் படுகையில் உள்ள மக்களைச் சந்தித்து எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசி வருகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் இனி வரும் காலங்களில் அவசியம். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சட்ட வடிவம் கொண்டு வர வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியில் 5 மாவட்டங்கள் வரை உள்ளன. அந்த ஐந்து மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் தான் ஓஎன்ஜிசி ஹைட்ரோகார்பன் ஆகிய திட்டங்கள் அங்கு வராது. முழுமையாக விவசாயத்தில் மட்டும் பயன் அளிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்" என்றார் அன்புமணி.

காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா- மோடியைப் பாராட்டி ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு, "ரஜினியின் கருத்து அது. தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த ஒரு கருத்தும் சொல்லலாம். இந்தியாவிலும் யார் எந்த ஒரு கருத்தினையும் சொல்லலாம்" என்றார் அன்புமணி.

வைகோ காங்கிரஸை எதிர்த்துப் பேசியது பற்றிய கேள்விக்கு அன்புமணி பதில் அளிக்கையில், "உண்மையைத் தான் கூறியிருக்கிறார். இந்த கேள்வியை வைகோவிடம்தான் கேட்க வேண்டும். அது அவருடைய கருத்து. அவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x