Published : 13 Aug 2019 12:43 PM
Last Updated : 13 Aug 2019 12:43 PM

அத்திவரதர் தரிசனம்: மேலும் ஒரு மண்டலம் நீட்டிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை,

40 ஆண்டுகளுக்குப் பின் தரிசனம் தரும், அத்திவரதரை கடந்த 40 நாட்களுக்கும் மேலாக 70 லட்சம் பக்தர்கள் தரிசித்த நிலையில் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர் கடந்த 1979-ம் ஆண்டுக்குப் பின் 40 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூலை 1-ம் தேதி மீண்டும் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
அன்றுமுதல் லட்சக்கணக்கான மக்கள் தினமும் அத்திவரதரைத் தரிசித்து வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சி மாவட்ட நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு தினமும் லட்சக்கணக்கில் இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் கூட்டம் வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரைக் காணவும், சில நாட்களே தரிசனம் உள்ள நிலையாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை ஆகஸ்ட் 17-ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. இதுவரை சுமார் 70 லட்சம் பேர் அத்திவரதரைத் தரிசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசி (75) என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் இன்று நீதிபதி ஆதிகேசவலு முன் ஆஜராகி முறையீடு செய்தார்.

அவரது முறையீட்டில், “உடையார்பாளையத்தில் அத்திவரதரைப் பாதுகாத்து வைத்திருந்ததாக வரலாறு இருப்பதாகவும், அந்தப் பகுதியைச் சேர்ந்த தனது கட்சிக்காரர் தமிழரசியால், அத்திவரதரைத் தரிசிக்க முடியவில்லை என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளார். முதியோர் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் இன்னும் அத்திவரதரைத் தரிசிக்காத காரணத்தால் தரிசன உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என நீதிபதி ஆதிகேசவலு முன் வழக்கறிஞர் பிரபாகரன் முறையீடு செய்தார்.

முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார். விரைவில் இதுகுறித்து மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x