Published : 13 Aug 2019 12:29 PM
Last Updated : 13 Aug 2019 12:29 PM

முகமூடிக் கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்கொண்ட வயதான தம்பதி: நெல்லை எஸ்.பி. நேரில் பாராட்டு

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் வீட்டினுள் அரிவாளுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்களை துணிச்சலுடன் போராடி விரட்டிய வயதான தம்பதியரை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

சண்முகவேல் - செந்தாமரை தம்பதியின் வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற எஸ்.பி. அருண், அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர், வீட்டில் சிசிடிவி பொருத்தியதற்குப் பாராட்டு தெரிவித்ததோடு துணிச்சலோடு போராடி, கொள்ளையர்களை விரட்டியதைப் புகழ்ந்தார். ஒரு மகனைப் போல் அந்தப் பாராட்டை உரித்தாக்குவதாகக் கூறினார்.

மேலும், வீட்டில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை இனி எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவரது மனைவி செந்தாமரை (65). இவர்கள், தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுடைய பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, சண்முகவேல், செந்தாமரை ஆகியோர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிறு இரவு) வீட்டின் போர்டிகோ பகுதியில் சண்முகவேலு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு 2 கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர்.

அவர்களில் ஒருவர், துணியால் சண்முகவேலின் கழுத்தை இறுக்கினார். இதனால், அவர் கூச்சலிட்டார். உடனடியாக, வீட்டுக்குள் இருந்த செந்தாமரை வெளியே ஓடி வந்தார். அவர், செருப்பு, நாற்காலி, உள்ளிட்டவற்றைத் தூக்கி எறிந்து, அந்தக் கொள்ளையர்களை விரட்ட முயன்றார். அப்போது, முகமூடிக் கொள்ளையரில் ஒருவர், செந்தாமரை அணிந்திருந்த 40 கிராம் நகையைப் பறித்தார். இதைத் தடுக்க முயன்றபோது, செந்தாமரையின் கையில் அந்த நபர் அரிவாளால் வெட்டினார். இருப்பினும் செந்தாமரை துணிச்சலுடன் போராடினார். முகமூடிக் கொள்ளையரின் பிடியில் இருந்து தப்பிய சண்முகவேலுவும் நாற்காலிகளைத் தூக்கி கொள்ளையர்களை நோக்கி வீசினார். வயதான தம்பதி இருவரும் துணிந்து போராடி, முகமூடிக் கொள்ளையர்களை விரட்டியடித்தனர்.

விசாரணை நிலவரம்:

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள், வீட்டில் கிடைத்த கைரேகை தடயங்களை வைத்து விசாரணை வேகமெடுத்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x