

சென்னை
பாஜகவின் மற்றொரு கையாக அதிமுக செயல்படுகிறது என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "நீலகிரி வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழக அரசு எந்தவித உதவிகளையும் சரியாகச் செய்யவில்லை. அதனால்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கே சென்றார். இதன்பிறகாவது, தமிழக அரசு செயல்படத் தொடங்க வேண்டும். மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய இனியாவது தமிழக அரசு முன்வர வேண்டும்.
இயற்கைப் பேரிடர் நிவாரண நிதிகளைப் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அதிமுக கிட்டத்தட்ட பாஜகவின் மற்றொரு கையாகச் செயல்படுகிறது. தங்கள் மாநிலம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சமயத்திலாவது, தமிழக அரசு இங்கிருக்கும் பிரச்சினைகளிடம் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, நிதி உதவியைப் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
அதிமுக மத்திய அரசு செய்யும் அனைத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் ஆதரித்து வாக்களிக்கக் கூடியவர்கள், தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்திலாவது கோரிக்கைகளை முன்வைத்து, நியாயமான நிதியைப் பெற வேண்டும்", என கனிமொழி தெரிவித்தார்.