

மதுரை சுற்றுச்சூழல் பூங்கோவில் பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் நடத்த தனியாருக்கு டெண்டர் விடப்பட்டதோடு, சைக்கிளிங் பாதை அமைத்து வணிக மயமாக்கும் முயற்சியை மாநகராட்சி சத்தமில்லாமல் தொடங்கியுள்ளதால், சுற்றுச்சூழல் பூங்கா சுழலியல் அந்தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இயந்திர மயமான நகர வாழ்வில் வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குழந்தைகளுடன் பொழுதுப்போக்குவதற்கு
இயற்கை சூழல் மிகுந்த இடங்களை தேடி செல்கின்றனர். வெப்ப மண்டல பகுதியான மதுரையில் நகரப்பகுதியிலே நடைப்பயிற்சி செல்லவும், பொழுதுப்போக்கவும் அப்படியொரு இயற்கை சூழல் மிகுந்த இடம் இல்லாமல் இருந்தது.
மதுரை மக்களின் இந்த மனக்குறையைப் போக்க மாநகராட்சி அலுவலக வளாகத்திலே 20 ஏக்கரில் 2004ம் ஆண்டு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா ஆரம்பிக்கும்போது மரங்கள், புல்வெளிப்பகுதிகள் இல்லை.
அரச மரம், வேப்ப மரம், புங்க மரம், ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு வகை மரச்செடிகளை, பூங்காவில் வைத்து தற்போது அதனை பெரியமரமாக்கியுள்ளனர். தற்போது பார்ப்பதற்கு சுற்றுச்சூழல் பூங்கா மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு அடர் வனம் போல் காணப்படுகிறது. அமைச்சர்கள், அரசு துறை உயர் அதிகாரிகள் முதல் சமானியர்கள் வரை இந்த பூங்காவில் தினமும் காலை நேரங்களில் நடைப்பயிற்சி வந்து செல்கின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் பச்சை பசேலேன்று காணப்படும் மரங்கள், செடி, கொடிகள், புல்வெளித்தரைகள் என்று குழந்தைகளையும், பெரியவர்களையும் குதூகலமடைய வைக்கிறது.
இந்த பூங்காவில் கிடைக்கும் ஓய்விற்கான சூழலிற்காகவே இவ்விடத்திற்கு தினமும் பார்வையாளர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பல்வேறு வகையான அரிய வகை மரங்கள் மற்றும் செடிகளையும், அதில் வசிக்கும் பல்வகை பறவைகளை கொண்டுள்ள இந்த பூங்கா உண்மையில் மரங்கள் மற்றும் இயற்கையை ரசிப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும். தினமும் காலையும், மாலையும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், இந்த பூங்காவை பராமரிப்பதால் இந்த பூங்கா பசுமை மங்காமல் உள்ளது. காலையில் நடைபயிற்சி வருவோர் இலவசமாக அனுமதிக்கின்றனர். மாலையில் கட்டணம் அடிப்படையில் பார்வையாளர்கள், பூங்காவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்த பூங்காவில் மாலை நேரங்களில் பார்வையாளர்களை அதிகரிக்க மாநகராட்சி வணிக ரீதியாக ‘லேசர் ஷோ’ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ‘லேசர் ஷோ’ அமைக்க முதலீடு செய்ய தனியாரை அனுமதித்து அவர்களை நடத்தவும் மாநகராட்சி டெண்டர் விட்டுள்ளனர்.
மாநகராட்சி, முதலீடே செய்யாமல் வருமானம் ஈட்ட இந்த முடிவுக்கு வந்துள்ளது. மாநகராட்சியே குழந்தைகளை மகிழ்விக்க பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால், நிதிப்பற்றாக்குறையால் தனியாருக்கு குறிப்பிட்ட ஆண்டிற்கு டெண்டர் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், வணிக ரீதியாக இந்த பூங்காவை பயன்படுத்த ஆரம்பித்தால் மாலை நேர ‘லேசர் ஷோ’வுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ராஜாஜி பூங்காவின் உள்ளேயும், வெளியேயும் உணவுப்பொருட்கள் விற்க அனுமதிப்பார்கள்.
அதனால், குப்பைகள் அதிகளவு பூங்காவில் குவிய வாய்ப்புள்ளது. அதுபோல், பூங்காவில் ‘சைக்கிளிங்’ பாதை அமைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளது. அப்படி சைக்கிளிங் பாதை அமைத்தால் பூங்காவின் பசுமை சூழல் மாற வாய்ப்புள்ளது.
அதனால், எந்த நோக்கத்திற்காக இந்த பூங்கா அமைக்கப்பட்டதோடு அந்த நோக்கம் நிறைவடையாமல் ராஜாஜி பூங்காவை போல் வணிக ரீதியாக தனியாருக்கு தொடர்ந்து ‘டெண்டர்’விடப்படக்கூடிய சூழல் ஏற்படும். அதனால், மாநகராட்சியின் மற்றப்பூங்காக்களை போல், இதுவும் 10ல் 11வது பூங்காவாக மாற வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் அபுபக்கர் கூறுகையில், ‘‘ஏற்கெனவே தல்லாகுளம் என்ற நீர்நிலையை அழித்தே 1971ம் ஆண்டில் மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் பூங்காவையும் அழிக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. சுற்றுச்சூழலை
பாதுகாப்பது எப்படி என்பதை பல்லாயிரக்கணக்கான மக்கள் தெரிந்துக் கொள்ளக் கூடிய இடமாக சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது. எதிர்காலத்தில் பூமியை பாதுகாக்க இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் இப்பூங்கா பயன்படும். அதனால், இந்த பூங்காவை வணிக பயன்பாட்டிற்கு தனியாருக்கு டெண்டர் விடாமல் மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும்’’ என்றார்.