

சேலம்
மத்திய அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார், அவர் இருப்பது பூமிக்கு பாரம் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 100 அடியை கடந்தது. அணை வரலாற்றில் 65-வது முறையாக நீர் மட்டம் 100 அடியை எட்டியது.
இன்று காலை 8.50 மணிக்கு முதல்வர் பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். வினாடிக்கு 3,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்படும். அணையின் கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி. பழனிசாமி மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''மேட்டூர் அணை நிரம்பியதால், மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்கள் பாசனத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. தற்போது பகல் நேரம் என்பதால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஆற்றில் படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். கடைமடை விவசாயிகள் பயனடையும் வகையில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும். இதுபோல டெல்டா பாசன ஏரி, குளங்களும் நிரப்பப்படும்.
ஏரி, குளங்கள் தூர் வாரும் பணியைக் கண்காணிக்க, ஐஏஎஸ் அதிகாரி பாலாஜி தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார். தற்போது வாய்க்கால்களில் 26 ஆயிரம் கனஅடி தண்ணீர்தான் போக முடியும். இது நாற்று நடுவதற்குப் போதுமானது. விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதைகள் தயார் நிலையில் உள்ளன.
கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பிவிட்டன. இனி அவற்றுக்கு வரும் நீர் முழுவதும் தமிழகத்துக்கு வரும். எனவே, நமக்குத் தேவையான அளவு நீர் கிடைக்கும். டெல்டா மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் மத்திய அரசின் அனுமதி பெற்று, கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும்.
மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு அமைச்சர்கள் செல்லவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களைக் கூறியிருக்கிறார். கனமழை பெய்த அடுத்த நாளே, அமைச்சர் உதயகுமார் நீலகிரி மாவட்டத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 கோடியில் நிவாரணம் அளிப்பதாகக் கூறியுள்ளார். அதில் என்ன நிவாரணம் அளிக்க முடியும்?''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அதிமுக ஆட்சியைக் கலைத்தால்கூட ஆளுங்கட்சியினர் அதுகுறித்து கேள்வி எழுப்பமாட்டார்கள் என சிதம்பரம் தெரிவித்த கருத்து குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், ''ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத்துக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார். காவிரி பிரச்சினையைத் தீர்த்து வைத்தாரா? முல்லைப் பெரியாறு பிரச்சினையைத் தீர்த்து வைத்தாரா? தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளாரா? அவர் இருப்பது பூமிக்கு பாரம்'' என்று தெரிவித்தார்.
தன்னுடைய வெளிநாட்டுப் பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், ''வெளிநாட்டுப் பயணத்தின்போது, கால்நடை ஆராய்ச்சி, எரிசக்தித் துறை, மருத்துவம் உள்பட பல்வேறு துறை வளர்ச்சியைப் பார்வையிட்டு, அவற்றை தமிழகத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அங்குள்ள நம் நாட்டுத் தொழிலதிபர்களைச் சந்தித்து, தமிழகத்துக்கு நிறைய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.