Published : 13 Aug 2019 10:20 AM
Last Updated : 13 Aug 2019 10:20 AM
சென்னை
இங்கர்சாலைப் புகழ்ந்தால், 'ஆன்ட்டி அமெரிக்கன்' என சொல்லிவிடுவார்கள் என தான் பயந்ததாக, நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் திருக்குறள் மாநாடு நேற்று (திங்கள்கிழமை) மாலை நடைபெற்றது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமுருகன் காந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், "பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, திருக்குறள் மாநாட்டை நடத்தும் இந்த நாளில்தான் அமெரிக்காவின் கடவுள் மறுப்பாளர், பகுத்தறிவாளர், மாபெரும் புரட்சியாளர் பழமையை எதிர்த்துப் போராடிய இங்கர்சால் பிறந்த நாள். இங்கர்சாலுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாமா என யோசித்தால், எனக்கு ஒரு பயம் வந்துவிட்டது. கடவுள் மறுப்பாளர்கள், பழமையை எதிர்ப்பவர்கள், பகுத்தறிவாளர்களைப் பாராட்டிப் பேசும்போது, என்னை 'ஆன்ட்டி அமெரிக்கன்' என சொல்லிவிட்டால் என்ன செய்வது?
ஏனென்றால் இங்கு பெரியாரியவாதி என்றால், 'ஆன்ட்டி இந்தியன்' என சொல்கிறார்கள். அதேபோன்று இங்கர்சாலைப் புகழ்ந்தால் 'ஆன்ட்டி அமெரிக்கன்' என சொல்லிவிட்டால் நான் எங்கு போவது? அது பெரிய பிரச்சினையாகிவிடும் என நினைத்தேன்".
இவ்வாறு சத்யராஜ் பேசினார்.