Published : 01 Jul 2015 04:03 PM
Last Updated : 01 Jul 2015 04:03 PM

அநாகரிகமாக நடைபெற்ற தேர்தலில் வென்றதால் ஜெ.வுக்கு வாழ்த்து சொல்வதில் பலனில்லை: இளங்கோவன்

அநாகரிகமாக நடைபெற்ற தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு அரசியல் நாகரிகம் கருதிக்கூட வாழ்த்து சொல்வதில் எந்தவிதமான பலனும் ஏற்படப்போவதில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாஜகவின் ஒரு அமைப்பை சேர்ந்த நிர்வாண சாமியார்கள் புதுடெல்லியில் தங்கியிருந்த காமராஜரைத் தாக்கி கொல்ல முயன்றனர். அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதற்கு பிராயச்சித்தம் காண்பதற்காவே தற்போது காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடப் போவதாக பாஜக அறிவித்திருக்கலாம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அதிமுக வார்டு செயலர்போல் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். மக்களை ஒன்றுதிரட்டி தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளோம். வழக்கு தொடர்வது குறித்த ஆலோசனையும் நடக்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் திமுகவுக்கு பாதிப்பு இருக்கலாம். இக்காலத்தில்தான் தமிழகத்தில் பல நல்ல காரியங்கள் நடைபெற்றன. அரசு, வங்கி ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வந்து, மக்களுக்கு சேவை செய்தனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும். நான் முதல்வராக இருக்க வேண்டுமென நினைத்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே முடிவெடுக்கப்படும். ப.சிதம்பரத்துடன் எனக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. மகளிரணி தலைவிக்கான பதவியில் என்னுடைய ஆதரவு நடிகை குஷ்புவுக்கு மட்டுமல்ல, அனைத்து மகளிருக்கும் உண்டு.

ஆர்.கே.நகரில் நாகரிகமாக நடந்த தேர்தலாக இருந்தால் வாழ்த்து சொல்லலாம். அநாகரிகமாக நடந்த தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொல்வதால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை. வேண்டுமானால், சசிகலாவும், ஜெயலலிதாவும் மாறிமாறி வாழ்த்து சொல்லிக்கொள்ளலாம். ஆளுங்கட்சியை குறைகூறி மட்டுமே கட்சியை முன்னிலைப்படுத்தவில்லை. மக்களிடம் சுரண்டப்படும் பணம் லஞ்சமாக கைமாறும்போது அதை எடுத்துச் சொல்கிறோம். இது எங்கள் கடமை.

திமுகவும், காங்கிரஸும் தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறோம். 25 ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த விவரங்களை ஊடகங்களில் வெளியிடுவோம்.

எங்களுக்குள் மறைமுக உறவு இருப்பதாகவோ, நான் வெளியிடும் பேட்டி, அறிக்கைக்குக்கு பின்னால் இருந்து கருணாநிதிதான் முடுக்கி விடுகிறார் என்று சொல்வதில் நியாயம் இல்லை. திமுகவுடன் கூட்டணி இருக்குமா என்பதை தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தெரியும் என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் கூறியது: தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் 5 நாட்களாக சட்டப்பேரவை தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். மக்களின் உணர்வுகளுடன் இணைந்து செயலாற்றுவதன் மூலமே எதையும் சாதிக்க முடியும். தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் உட்பட அனைத்து முடிவுகளையும் கட்சி மேலிடமே எடுக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x