

காஞ்சிபுரம்
அத்திவரதர் வைபவத்தின் 43-ம் நாள் நிகழ்ச்சியில் மஞ்சள் வண்ண பட்டாடை உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காஞ்சிபுரத்தில் நேற்று 4 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைப வத்தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் மாலைக்கு மேல் கூட்ட நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் நேற்று அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். இதனால் நான்கு மாட வீதிகள், டி.கே.நம்பித் தெரு ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் வரை ஆனது.
அதேபோல் முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்யும் பாதைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஐபி தரிசனத்தில் காலை 6 மணிக்கு வரிசையில் சென்றவர்கள் பலர் பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் சுவாமியைத் தரிசனம் செய்ய முடிந்தது. இதேபோல் மிக முக்கிய பிரமுகர்கள் தரிசன வரிசையில் காலை 7 மணிக்கு வந்த பக்தர்கள் 10 மணிக்கு பிறகே தரிசனம் செய்தனர். பொதுவாக 20 நிமிடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த வரிசையில் 3 மணி நேரம் ஆனது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலர் அத்திவரதரை நேற்று தரிசனம் செய்தனர்.
மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், நேற்று ஒரே நாளில் அதிக அளவில் மிக முக்கிய பிரமுகர்கள் வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அத்திவரதர் தரிசனம் நிறைவடைய 4 நாட்களே உள்ளன. இந்நிலையில் பொது தரிசன வரிசையில் பக்தர்கள் தரிசிப்பதற்கு இடையூறு செய்யாமல் மிக முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க வேண் டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.