

மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனர், கிருஷணர் இல்லை என்றும் இவர்கள் ஹிட்லர் மற்றும் முசோலினியுமாவார்கள் என்பதை விரைவில் நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:
நமது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அரசியல் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்வது முழுக்க முழுக்க நியாயம் என்றும் பாராளுமன்றத்திலே அமித் ஷா பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு என்றும் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கடைசியாக நரேந்திர மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணரையும் அர்ஜுனரையும் போல் இருக்கிறார்கள், ஆனால் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது நமக்குத் தெரியாது அவர்களுக்குத் தெரியும் என்று பேசினார் ரஜினி.
போகப் போக ரஜினிகாந்த் புரிந்து கொள்வார், நரேந்திர மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணர் அர்ஜுனர் அல்ல ஹிட்லரும் முசோலினியும் என்று போகப்போக புரிந்து கொள்வார் ரஜினி என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு பேசினார் பாலகிருஷ்ணன்.