

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. விழாவில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:
தமிழகத்தில் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த ஓராண்டில் 24 சதவீதம் உயிரிழப்புகள் குறைக்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் பாராட்டியுள்ளது.
வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளதால் விபத்துகள் நேரிடுகிறது. இதை தடுக்கும் வகையில் முதல்கட்டமாக செங்கல் பட்டு - திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலையில் மேலை நாடுகளைப் போல் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் கொண்டுவரப்பட உள்ளது. விதி மீறல்கள் கண்காணிப்பு கேமரா மூலம் பார்வையிட முடியும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக விபத்து ஏற்படும் 5 சாலைகள் கண்டறிந்து இந்த வசதி செய்யப்பட உள்ளது.
நகர்ப்புறங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியத் தொடங்கி யுள்ளனர். கிராமப் புறங்களில் குறைவாக உள்ளது. பள்ளி பாடப் புத்தகங்களில் சாலை விதி முறைகள் குறித்த பாடங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அரசின் நிதி கேட்டிருந்தோம். முதலில் 525 பேருந்துகளை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை நகருக்கு 300 பேருந்துகள் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். இதன்படி மொத்தம் 825 மின்சாரப் பேருந்துகள் வேண்டுமென தெரிவித்துள்ளோம்.
உலக வெப்பமயமாவதை தடுக்கும் வகையில் ஜெர்மன் நாட்டில் சி 40 என்ற அமைப்பு உள்ளது. தமிழக முதல்வர் இந்த அமைப்பில் கையெழுத் திட்டுள்ளார். இதன்மூலம் எடுக்கப் படும் நடவடிக்கை காரணமாக வரும் ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளையும், 12 ஆயிரம் பிஎஸ் 6 பேருந்துகளையும் குறைந்த வட்டி விகிதத்தில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகள், பிஎஸ் 6 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவை வரும்போது தமிழகம் இந்தியாவில் போக்குவரத்துத் துறையில் முன்மாதிரி மாநிலமாக இருக்கும், என்றார்.
விழாவில், மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.