Published : 12 Aug 2019 09:54 AM
Last Updated : 12 Aug 2019 09:54 AM

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு உட்பட தமிழக அரசியல் நிலவரத்தை ஆர்வமாக கேட்டறிந்த அமித்ஷா: பாஜக நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை

சென்னை

தமிழக பாஜக தலைவர்களுடன் தனியாக ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு எழுதிய நூல் வெளியீட்டு விழாவுக்காக பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.

ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்த அவரை நேற்று காலை 9 மணிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணே சன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசி யச் செயலாளர் எச்.ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொதுச் செயலாளர்கள் வானதி சீனி வாசன், கருப்பு முருகானந்தம், நரேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்டறிந் துள்ளார். இதுதொடர்பாக ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மக்களவைத் தேர்தல் தோல்வி, வேலூர் தோல்வி இதனால் ஒருவித தயக்கத்துடன் அமித்ஷாவை சந்தித் தோம். ஆனால், மிகவும் உற்சாகத் துடன் எங்களை வரவேற்ற அவர், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந் தார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக் குப் பிறகு தமிழக அரசியல் களம் எப்படி உள்ளது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு வர வேற்பு உள்ளது, வேலூர் மக்கள வைத் தொகுதியில் குறைந்த வாக்கு கள் வித்தியாசத்தில் அதிமுக தோற்க என்ன காரணம், தமிழகத் தில் பாஜக எதிர்கொள்ளும் சவால் கள் என்னென்ன என்று கேட்டு பல்வேறு விளக்கங்களை பெற்றுக் கொண்டார். இந்தச் சந்திப்பு பெரும் ஊக்கமளிப்பதாக இருந்தது’’ என் றார்.

வேலூர் மக்களவைத் தொகுதி பற்றி கேட்ட அமித் ஷா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் பொதுத்தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுக 3 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் வெறும் 8 ஆயி ரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெறுகிறது என் றால் அதற்கு முக்கியமான காரணம் என்ன, முஸ்லிம் வாக்குகள் அதி கம் இருந்தும் திமுகவின் வாக்கு வித்தியாசம் குறைந்தது ஏன், இந் துக்களின் வாக்குகளை திமுக இழந் துள்ளதா, இந்து வாக்கு வங்கி உரு வாகியுள்ளதை வேலூர் தேர்தல் முடிவுகள் காட்டுகிறதா என்பது போன்ற கேள்விகளையும் அமித் ஷா எழுப்பியதாக கூறப்படு கிறது.

வேலூரில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் திமுக, அதிமுகவுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத் தன என்பதை கடந்த தேர்தல் களுடன் ஒப்பிட்டும் கள நிலவரம், மக்கள் கருத்து, முத்தலாக், காஷ் மீர் விவகாரம் ஆகியவை தாக் கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யு மாறு தமிழக பாஜக தலைவர் களுக்கு அமித்ஷா ஆலோசனை வழங்கியதாகவும் சந்திப்பின் போது உடனிருந்த பாஜக தலை வர் ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளித ழிடம் தெரிவித்தார்.

மொத்தத்தில் அமித்ஷா உடனான சந்திப்பால் தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x