Published : 12 Aug 2019 09:09 AM
Last Updated : 12 Aug 2019 09:09 AM

சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டுசெல்ல கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை: ரயில்வே துறை மீது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குற்றச்சாட்டு

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் வேகன்களில் குடிநீர் நிரப்பப்படுகிறது.படம். ந. சரவணன்.

சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந் தாலும், திட்டமிட்டப்படி நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தெரிவித்தனர்.

சென்னையில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டதால் அரசு உத்த ரவின்படி காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரயில் கடந்த ஜூலை 12-ம் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது.

50 வேகன்கள் கொண்ட சிறப்பு ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண் ணீர் சென்னைக்கு அனுப்பிவைக் கப்பட்டது. அதன்பிறகு கூடுதலாக மற்றொரு ரயில் இயக்கப்பட்டு மேலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டது. அதன்படி நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு அனுப்பிவைக்கப் பட்டது. சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை அனுப்ப முடிவு செய்திருந்த நிலையில் 50 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே அனுப்ப முடிந்தது. திட்டமிட்டபடி 1 கோடி லிட்டர் குடிநீர் அனுப்பி வைக்க மேலும் கூடுதலாக ரயில்கள் இயக்கவேண்டிய தேவை ஏற் பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியமும் ரயில்வே நிர்வாகத்திடம், அரசு உத்தரவுபடி நாள் தோறும் 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூடு தலாக 2 ரயில்கள் தேவை என தெரிவித்தது.

ஆனால், ரயில்வே நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் திட்டம் தொடங்கி இன்றுடன் 1 மாதம் நிறைவடைந்த நிலையில், திட்ட மிட்டபடி 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும் போது, ‘காலையில் ஒன்று, மாலை யில் ஒன்று என 2 ரயில்களில் குடி நீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 11-ம் தேதி (நேற்று) வரை 12 கோடியே 75 லட் சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 2 ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு கடந்த மாதமே கடிதம் அனுப்பினோம்.

ஆனால், அதற்கான நடவடிக்கை களை ரயில்வே நிர்வாகம் இதுவரை எடுக்கவில்லை. இதனால், சென் னைக்கு திட்டமிட்டபடி நாள் தோறும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்வது கேள்விக் குறியாகவே உள்ளது'' என்றார்.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ''கூடுதல் ரயில்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வர வேண்டும். அதற்கான வேலை நடந்து வரு கிறது. இருப்பினும், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை உணர்ந்து இந்த வாரத்தில் 3-வது ரயிலை இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ஓரிரு நாளில் 3-வது ரயிலை இயக்குவதற்கான உத்தரவு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி களுக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x