காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு - டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு

காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு - டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு
Updated on
2 min read

சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 73.60 அடியை கடந்துள்ள நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெல்டா பாசனத்துக்கு நாளையே நீர் திறக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன.

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.50 அடியாக இருந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.

தொடக்கத்தில் 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 61.88 அடியாகவும் நீர் இருப்பு 26.10 டிஎம்சி-யாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 82 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 67.40 அடியாகவும், நீர் இருப்பு 30.50 டிஎம்சியாகவும் உயர்ந்தது. அதே வேளையில், நீர்வரத்து விநாடிக்கு 93 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மதியம் 12 மணியளவில் நீர் வரத்து விநாடிக்கு 1.05 லட்சம் கனஅடியாகவும், மாலை 4 மணிக்குப் பின்னர் மேலும் அதிகரித்து விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாகவும் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 73.60 அடியை எட்டியது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் இரவு 8 மணியில் இருந்து நேற்றிரவு வரை ஒரே நாளில் நீர்மட்டம் 12 அடி அதிகரித்துள்ளது.
இதனிடையே, பிலிகுண்டுலுவில் காவிரியின் நீர்வரத்து விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே, மேட்டூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து இதே நிலையில் நீடித்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை காலைக்குள் 90 அடியை எட்டிவிடும். இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களின் தேவைக்காக, மேட்டூர் அணையில் நாளை (13-ம் தேதி) நீர் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால், அணையில் குறைந்தது 53 டிஎம்சி நீர் இருப்பு இருக்க வேண்டும். தற்போது அணையில் 35.87 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கான நீர்வரத்து இதே நிலையில் இருந்தால் நாளைக்குள் அணையின் நீர் இருப்பு 50 டிஎம்சி-யை கடந்துவிடும். அப்போது அணையின் நீர்மட்டம் 90 அடியைக் கடந்துவிடும். எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உடனடி தேவை இருக்கும் பட்சத்தில் அணையை நாளையே திறக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in