Published : 11 Aug 2019 06:52 PM
Last Updated : 11 Aug 2019 06:52 PM

‘‘சோதனையான நேரத்தில் தலைமை ஏற்க வந்த சோனியா காந்தி’’- அழகிரி பாராட்டு

சென்னை

சோதனையான நேரத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்த சோனியா காந்தியை லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக பாராட்டுகிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மீண்டும் சோனியா காந்தி நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். மிகமிகச் சோதனையான காலகட்டத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 19 ஆண்டுகாலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்து, காங்கிரஸ் கட்சியை வலிமையுடன் வழிநடத்தியவர். இவரது தலைமையின் கீழ் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பத்தாண்டு காலம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வழி நடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் பெரும் துணையாக இருந்தவர்.

தன் மீது பிரதமர் பதவி திணிக்கப்பட்ட போது அதை மறுத்து, மன்மோகன்சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தியவர். பதவி மறுப்பாளரான இவரை இந்திய மக்கள் போற்றி பாராட்டி மகிழ்ந்தனர். இவரது தியாகத்தினாலும், கடுமையான உழைப்பினாலும் காங்கிரஸ் கட்சி வலிமை பெற்றது. இந்திய அரசியலில் முன்னிலைப் பங்கு வகித்தது.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல்காந்தி விலகிக் கொண்டார். மீண்டும் அவரே காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்ற ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையை அவர் நிராகரித்து விட்டார்.

இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் அன்னை சோனியா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த காலத்தில் இவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி பல வெற்றிகளை குவித்தது. அதைப் போல, மீண்டும் அன்னை சோனியா காந்தி அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து, வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

சோதனையான நேரத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்த சோனியா காந்தியை லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x