

பெண்களின் கல்வி வளர்ச்சியில் ராணி மேரி கல்லூரிக்கு பெரும் பங்கு உள்ளது என்று ஆளுநர் ரோசய்யா பாராட்டு தெரிவித்தார்.
பழமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை ராணி மேரி கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழா, கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. ஆளுநர் கே.ரோசய்யா நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 1914-ம் ஆண்டு வெறும் 33 மாணவிகளுடன் தென்னிந்தியாவிலேயே முதல் அரசு கல்லூரியாக தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, இன்றைக்கு 25 துறைகளுடன் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையும் இக்கல்லூரிக்கு உண்டு. ஆயிரக்கணக்கான பெண் பட்டதாரிகளை உருவாக்கி மகளிரின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது.
ஒரு நாட்டின் வெற்றி, அங்குள்ள திறமை மிக்க மனிதவளங்களைத்தான் சார்ந்தது. வகுப்பறையில்தான் ஒரு தேசம் உருவாக்கப்படுகிறது என்ற கூற்று மிகச்சரியான ஒன்று. இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டுமானால் மதிப்பு சார்ந்த கல்வி அவசியம். நம் நாடு சுதந்திரம் அடைந்து முதல் கல்வித்துறையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது.
உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய சரிபாதி பெண்கள் உள்ளனர். பெண்கள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகவும் அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் கல்வி மிகவும் அவசியம். இன்றைக்கு ஒரு துறையைகூட விட்டுவைக்காமல் எல்லா துறைகளிலும் பெண்கள் புகழ்பெற்று விளங்குகின்றனர். இந்தியாவில் பெண் கல்வி குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி கண்டிருந்தாலும்கூட இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார்.