

விருதுநகர்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சுதந்திர தினத்தன்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரி விருதுநகரில் காமராஜர் சிலைக்கு மனு கொடுத்தார் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் குமரி ஆனந்தன்.
விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்திற்கு வந்த குமரி ஆனந்தன் அங்கு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காமராஜர் காமராஜர் சிலை முன் சமர்ப்பித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் 1920இல் கள்ளுக்கடை மறியல் போரில் 56 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் அதில் நானும் ஒருவன். அப்பொழுது நான் தனிமை சிறையில் அடைக்கப்பட்டேன். அன்று முதல் மதுவிலக்கு கொள்கைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். மத்திய அரசு இதுவரை 36 சிறப்பு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. 37வது மசோதாவாக இமயம் முதல் குமரி வரை மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அக்டோபர் இரண்டாம் தேதி கொண்டாடப்படும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
முன்னதாக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட வேண்டும். மேலும் செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதைத்தொடர்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் அன்று நாடு முழுவதும் மதுவிலக்கு என்ற நிலையை எட்ட வேண்டும். தேசக் கொடியை ஏற்றுவோம் தேசத்தை கெடுக்கும் குடியை விரட்டுவோம் என்ற கோசம் எழ வேண்டும் என்றார்.