Published : 11 Aug 2019 12:45 PM
Last Updated : 11 Aug 2019 12:45 PM

காஷ்மீருக்கான 370 பிரிவை நீக்கியதன் மூலம் தீவிரவாதம் ஒழியும்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா : படம் ஏஎன்ஐ

சென்னை,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகையை வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவை திரும்பப் பெற்றதன் மூலம் அந்த மாநிலத்தில் தீவிரவாதம் ஒழியும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் வெங்கய்ய நாயுடு ஆற்றிய பணிகள், உரைகள், சந்திப்புகள், முக்கிய நிகழ்வுகள் ‘லிசனிங், லேர்னிங் அண்டு லீடிங்' (கேட்டல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தொகுக் கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நூலை வெளியிட்டார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினி காந்த், அப்போலோ மருத்து வமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.சி.ரெட்டி, ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், இந்திய பேட் மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் புல்லேல கோபிசந்த் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "
ஒரு எம்.பியாக, என்னைப் பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு இருந்த 370 பிரிவு சிறப்பு உரிமைகள் அனைத்தும் நீண்ட காலத்துக்கு முன்பே நீக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இந்த சிறப்பு உரிமைகளால் நாட்டுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்காது . தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் எனக்கு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகளை வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை திரும்பப்பெற்றதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.

தற்போது இந்த பிரிவு திரும்பப் பெறப்பட்டு இருப்பதன் மூலம் இனி வருங்காலத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் ஒழியும் . அந்த மாநிலம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என உறுதியாக நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினி காந்த் பேசுகையில், " ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை திறமையாகக் கையாண்டது சிறப்புக்குரியது. நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஆற்றிய உரை மிகச்சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள் . இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x