

எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி
பர்கூர் அருகே கிரானைட் தொழிற் சாலைகளில் இருந்து வெளியேற்றப் படும் திடக்கழிவுகளை சாலை யோரங்களில் கொட்டுவது தொடர்ந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பெய்து வரும் சமயத்தில், திடக்கழிவுகளால் மழை நீர் நிலத்துக்குள் செல்வது தடுக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், ஜெகதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 350 கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களை, இங்கு மெருகூட்டி, விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
குறிப்பாக, அச்சமங்கலம், சஜ்ஜலப்பள்ளி, ஏ.கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள சில கிரானைட் கல் மெருகூட்டும் தொழிற் சாலைகளிலிருந்து வெளியேற்றப் படும் திடக்கழிவுகளை சாலை யோரங்கள், நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் குவித்து வைக்கின்றனர். தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நேரத்தில், சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள கிரானைட் திடக்கழிவுகளால் பூமிக்குள் மழை நீர் செல்லாது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயராது என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபாகா் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிரானைட் கல் மெருகூட்டும் தொழிற் சாலைகளிலிருந்து வெளியேற்றப் படும் திடக்கழிவுகள் சாலையோரங் கள், நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் குவித்து வைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் வந்துள்ளன. மேலும், இது குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மனு ஆய்வின் போது கிரானைட் கல் மெருகூட்டும் ஆலைகளில் இருந்து திடக்கழிவுகளை ஆங்காங்கே சாலையோரங்கள், நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளி நிலங்களின் அருகில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவது அறியப்படுகிறது.
எனவே, கிரானைட் கல் மெருகூட்டும் தொழிற்சாலைகள், தங்கள் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றும் திடக்கழிவு களை தொழிற்சாலை வளாகத்துக் குள்ளாகவே தாழ்வான பகுதி களில் முறைப்படி சேமித்து வைத்து பசுமைப் போர்வையை உருவாக்க வேண்டும். மேற்கூறிய நிபந்தனைகளை மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என எச்சரித்திருந்தார். ஆனால், ஆட்சியரின் எச்சரிக்கையை மீறி கிராமப்பகுதிகளில் சாலையோரம் கிரானைட் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பர்கூர் பகுதி கிராம மக்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளில் இருந்து இரவு நேரங்களில் கிரானைட் கழிவு களை சாலையோரங்களிலும், விளை நிலத்தை ஒட்டியும் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இப்பகுதியில் கொட்டப் பட்டுள்ள கிரானைட் கழிவுகளை அகற்றவும், விதிகளை மீறி கிரானைட் திடக்கழிவுகளை சாலை யோரம் கொட்டும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்,’’ என்றனர்.