Published : 11 Aug 2019 10:05 AM
Last Updated : 11 Aug 2019 10:05 AM

தீவனப்பற்றாக்குறையால் விற்பனைக்கு வரும் கால்நடைகள்; மானிய விலையில் தீவனம், பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரிக்கை

கி. பார்த்திபன்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாழை, கரும்பு, வெற்றிலை, மரவள்ளி மற்றும் நெல் உள்ளிட்டவை பிரதான பயிர் களாகும். இதற்கு காவிரி, திருமணி முத்தாறு, ஏரி மற்றும் குளம் உள்ளிட்டவை பாசன ஆதாரமாக உள்ளன. விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பும் உப தொழிலாக மேற்கொற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், போதிய மழையின்மை, விவசாய கூலித் தொழிலாளர் பற்றாக்குறை, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் விவசாயத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. குறிப்பாக விவசாய நிலங்களின் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் கால்நடை வளர்ப்பையும் விட்டு வைக்கவில்லை.

விளைபொருட்கள் உற்பத்தி குறைவால் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. அதிக விலை கொடுத்து தீவனங்களை வாங்க இயலாத விவசாயிகள் காலங்காலமாக வளர்த்து வந்த கால்நடைகளை விற்பனை செய்கின்றனர்.

இதனால் கால்நடை சந்தைகளில் விற்பனைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போக்கு நீடித்தால் வருங்காலங்களில் கால்நடை வளர்ப்பு பெரும் சவாலாக அமைந்துவிடும், என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் எம். ஜி. ராஜேந்திரன் கூறியதாவது:

கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது. குறிப்பாக கறவை மாடு வளர்ப்பு. இந்த நிலைமை தற்போது தலைகீழாக மாறி வருகிறது. இந்த நிலைமைக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாததும் ஒரு காரணமாகும். கடந்த 2011-ம் ஆண்டு பசும்பால் கொள்முதல் விலை ரூ.18 லிருந்து ரூ.2.50 கூடுதலாக உயர்த்தப்பட்டது. 2014-ம் ஆண்டு கொள்முதல் விலை ரூ.5 உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் விலை உயர்த்தப்படவில்லை.

தீவன விலையேற்றம்

ஆனால் தீவனம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட வைக்கோல் கட்டு ரூ.120-லிருந்து ரூ.220 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதுபோல் 35 கிலோ எடை கொண்ட சோளத்தட்டு ரூ.150-லிருந்து ரூ.550 வரை விலை உயர்ந்துள்ளது.

வறட்சியால் கால்நடைகளுக் கான குடிநீரும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. கலப்புத்தீவன தயாரிப்புக்குத் தேவையான தவிடு, புண்ணாக்கு மற்றும் தானிய வகைகள் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை விலையேற்றம் கண்டுள்ளது. தீவன விலையேற்றத்தால் 1 லிட்டர் பசும் பால் உற்பத்திக்கு ரூ.49.84 செலவு ஆகிறது. ஆனால், ஆவின் நிறுவனத்தில் பசும்பால் 1 லிட்டருக்கு ரூ. 25 முதல் ரூ. 27 வரையும், எருமைப்பால் ரூ. 29 வரையும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. கால்நடை வளர்ப்பு லாபம் இல்லாத தொழிலாக மாறிவிட்டது.

அதேவேளையில் கால்நடை பராமரிப்பு செய்வதற்கான பணியாட்களுக்கும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், வீட்டு உறுப்பினர்கள் போல் வளர்க்கப் பட்ட கறவை மாடு உள்ளிட்ட கால்நடை களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நல்ல நிலையில் உள்ள கறவை மாடுகள், காளை உள்ளிட்டவை விற்பனைக்காக வெளி மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வயதான மாடுகள் அடிமாடாக விற்பனை செய்யப்படுகிறது.

மானிய விலையில் தீவனம்

இதற்கு தீர்வு காணும் வகையில் வைக்கோல், சோளத்தட்டு உள்ளிட்டவற்றை மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்க வேண்டும். குறைந்தபட்சம் இலவசமாக கறவை மாடுகள் வழங்கப்பட்ட நபர்களுக்காவது இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்க வேண்டும். ஆவின் மூலம் அடர் கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்குகின்றனர். தீவனப்புற்களும் வழங்கப்படுகிறது. எனினும், வறட்சியால் இவற்றை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. அரசு மட்டுமின்றி இயற்கையும் கைகொடுத்தால் கால்நடை வளர்ப்பை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும்.

அதேவேளையில் பால் உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குறிப்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கினால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு உதவியாக இருக்கும். பால் கொள்முதல் விலை உயர்த்தக்கோரி தமிழக முதல்வரை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x