அப்துல் கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வலியுறுத்தல்

அப்துல் கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, குழந்தைகள் மீது கொண்டிருந்த அன்பை போற்றும் விதமாக அவரது பிறந்த நாள் (நவம்பர் 14) ‘குழந்தைகள் தினமாக’ கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் (செப்டம்பர் 5) ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது.

அதேபோன்று மாணவர்களிடம் பேரன்பு கொண்டு அவர்களை உயர்ந்த கனவுகள் காண ஊக்குவித்தவர் அப்துல் கலாம். எனவே, அவரது பிறந்த நாளை (அக்டோபர் 15) ‘மாணவர்கள் தினமாக’ கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மாணவ சமுதாயத்துக்கு அப்துல் கலாம் ஆற்றிய பணியை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் வலியுறுத்தினார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் பல மாணவர் அமைப்புகளும் இதை வலியுறுத்தி வருகின்றனர்.

அகில இந்திய மாணவர் பெருமன் றத்தின் மாநிலச் செயலாளர் தினேஷ்:

மாணவர்கள் மீது முழு நம்பிக்கை கொண்டவர் அப்துல் கலாம். அவர்கள் மீது கொண்டிருந்த பேரன்பின் காரணமாக மாணவ சமுதாயத்துக்கு இறுதிவரை தொண்டாற்றியுள்ளார். அவரது பிறந்த நாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும்.

இந்திய தேசிய மாணவர் இயக்க (என்எஸ்யுஐ) மாநிலத் தலைவர் ப.பாபு, சட்டப் பஞ்சாயத்து இயக்க மாணவர் அணி உறுப்பினர் கோபிகா ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in