

த.சத்தியசீலன்
கோவை
பாரதியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. தகுதியுடைய வர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது தேடல் குழு.
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் ஆ.கணபதி, உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018 பிப்ரவரி மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அப்போதைய உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தலைமையில், சிண்டி கேட் உறுப்பினர்கள் பி.திருநாவுக் கரசு, என்.ஜெயக்குமார் ஆகி யோரைக் கொண்டு துணைவேந்தர் குழு அமைக்கப்பட்டு, பல்கலைக் கழகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சுனில் பாலிவால் இடமாறுதல் செய்யப் பட்டதையடுத்து, அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட மங்கட் ராம் சர்மா துணைவேந்தர் குழு தலைவரானார். பேராசிரியர் ஆ.கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், கடந்த மார்ச் மாதத் துடன் பதவிக்காலம் முடிந்தும், 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதற்கிடையில் துணைவேந்தர் தேடல் குழு அமைப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற செனட் உறுப் பினர்கள் கூட்டத்தில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், நவம்பர் மாதம் நடைபெற்ற சிண்டி கேட் உறுப்பினர்கள் கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்பி தியாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
துணைவேந்தர் தேடல் குழுவின் மூன்றாவது உறுப்பினராக, தமிழக அரசின் பிரதிநிதியை நியமிப்பதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்ட நிலையில், ஓராண்டு கழித்து உயர்கல்வித்துறை முன்னாள் செயலர் கணேசன் நியமிக்கப் பட்டார். அவர் அப்பொறுப்பில் இருந்து விலகியதால், தமிழக அரசின் முன்னாள் கூடுதல் செயலர் எம். ஷீலா பிரியா நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் தேடல் குழு முழுமையாக அமைக்கப்பட்டதை யடுத்து, தமிழக அரசின் உயர் கல்வித்துறை சார்பில், அரசாணை (எண். 197) வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப் பட்டுள்ளது.
இது குறித்து துணைவேந்தர் தேடல் குழு உறுப்பினர் சி.சுப்பிர மணியன் கூறும்போது, ‘பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடல் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது. இதையடுத்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவிக்கான தகுதிகள், 10 பக்க விண்ணப்பம் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் வரும் செப். 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதன்பின்னர் மூவர் குழு கூட்டம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்' என்றார்.
துணைவேந்தர் பதவிக்கான தகுதிகள்
“பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிஹெச்.டி. பட்டம் பெற்று பல்கலைக்கழகம், முதுநிலை பட்டப்படிப்பு கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய ஏதாவது ஒன்றில் 20 ஆண்டுகளுக்கு குறையாமல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10 வருடத்துக்கு குறைவில்லாமல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் டீன், துறைத்தலைவர் ஆகிய நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரு நூல்கள் வெளியிட்டிருக்க வேண்டும். சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் இரு கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும்” என்று பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தகுதிகள் குறித்து 14.07.2017 அன்று உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 187-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.