Published : 06 May 2014 08:00 AM
Last Updated : 06 May 2014 08:00 AM

குண்டுவெடிப்பு: சந்தேக நபர் உருவம் காட்பாடி ரயில் நிலையத்தில் பதிவு: ஹார்டு டிஸ்க் பறிமுதல்

குவாஹாட்டி ரயிலில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேகநபரின் உருவம் காட்பாடி ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, வீடியோ காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மே 1-ம் தேதி இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இதில், ஸ்வாதி என்ற பெண் இறந்தார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குவாஹாட்டி ரயிலில் பயணம் செய்த 3 சந்தேக நபர்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் பெங்களூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையம் ஏதாவது ஒன்றில் ஏறியுள்ளார்களா அல்லது இறங்கியுள்ளார்களா என்பது குறித்தும் அவர்களது முகம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் ஆய்வுசெய்து வருகின்றனர்.

இதில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை என சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், காட்பாடியில் உள்ள 16 கண்காணிப்பு கேமராவில் 13 இயங்குவதும், அரக்கோணத்தில் 12 கேமராக்கள் இயங்குவதும் தெரியவந்தது.

இந்த கேமராவில் பதிவான காட்சிகள் குறித்து வேலூர் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளையன் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது, சென்னையில் சிபிசிஐடி போலீஸார் வெளியிட்ட சந்தேக நபரின் உருவத்துடன் ஒத்துப்போக்கூடிய நபர் காட்பாடி ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கிறார். மே 1-ம் தேதி அதிகாலை 4.02 மணிக்கு குவாஹாட்டி ரயிலில் அந்த நபர் ஏறுவது தெரிகிறது. இந்த காட்சிகளை போலீஸாரால் பதிவிறக்கம் செய்யமுடியவில்லை.

மேலும், பதிவான காட்சிகளை 7 நாட்கள் மட்டும் சேமிக்க முடியும் என்பதால் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை சிபிசிஐடி போலீஸார் நிபுணர் குழு உதவியுடன் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், “குவாஹாட்டி ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகளை சென்னையில் உள்ள வீடியோ காட்சிகளுடன் ஒப்பிட்டு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காக வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ள ஹார்டு டிஸ்குகளை பறிமுதல் செய்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x