

கோவை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 கோடியில் 350 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி, அதன் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஏற்கெனவே பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஆற்றின் வேகம் அதிகரித்த நிலையில், கடந்த 8-ம் தேதி அதிகபட்சமாக விநாடிக்கு 88,000 கனஅடி வீதம் பவானி ஆற்றில் தண்ணீர் வெளியேறியது.
இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் மற்றும் தாழ்வான இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேட்டுப்பாளையத்துக்கு நேற்று வந்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கரைபுரண்டோடும் பவானி ஆற்றைப் பார்வையிட்டார். தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் பேரிடர் மீட்புப் படையினரிடம் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மேட்டுப்பாளையத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ரூ.25 கோடியில் 3 ஏக்கர் பரப்பில் 350 புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்கட்டப் பணிகள் தொடங்க உள்ளன. முதல்வரின் உத்தரவுப்படி, மழைக்கு முன்பே ஏராளமான குளம், குட்டைகள் தூர் வாரி சீரமைக்கப்பட்டதால் மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டுள்ளது" என்றார்.
எம்.பி ஏ.கே.செல்வராஜ், எம்எல்ஏ-க்கள் ஓ.கே.சின்னராஜ், பிஆர்ஜி.அருண்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.