

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் கடைசி மகன் வாலேஸ்வரன், சென்னை யில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.
செக்கிழுத்த செம்மல், கப்ப லோட்டிய தமிழன் என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு 4 மகன்கள், 4 மகள்கள் இருந்தனர். ஏற்கெனவே 7 பேர் இறந்துவிட்டனர். அவரது கடைசி மகனான வாலேஸ்வரன் கடந்த ஏப்ரல் வரை மதுரை நாகமலை புதுக்கோட்டையில் மகன் சிதம்பரம் வீட்டில் இருந்தார். பிறகு சென்னை மடிப்பாக்கத்தில் இளைய மகன் செல்வராமன் வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வீட்டில் இருந்த அவர் நேற்று காலமானார்.
தொழிற்சங்கப் போராட் டங்கள் உட்பட பல போராட் டங்களில் பங்கேற்றதால் வழக் கறிஞர் தொழில் செய்ய வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி, அவர் தொடர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்ய அனுமதி வழங்கியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் துரை. அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே தனது கடைசி மகனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்று வ.உ.சி. பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.
கண்கள் தானம்
வாலேஸ்வரன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மனைவி அலமேலு, மகன்கள் சிதம்பரம், செல்வராமன், மகள் மரகத மீனாட்சி ஆகியோர் உள்ளனர்.
வாலேஸ்வரனின் கண் கள், சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. அவரது இறுதிச்சடங்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் இன்று (ஞாயிறு) மதியம் 3 மணிக்கு நடக்கிறது.