Published : 10 Aug 2019 08:01 PM
Last Updated : 10 Aug 2019 08:01 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையில் லஞ்சத்தை ஒழிக்க  ''இ-சலான்” கருவி அறிமுகம்

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையில் லஞ்சத்தை ஒழிக்க வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க நவீன வசதிகளுடன் கூடிய "இ சலான்" முறை நேற்று சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து கைப்பட ரசீது எழுதி "சீல்" வைத்து தருகின்றனர். இதில் போக்குவரத்து காவல்துறையின் லஞ்சம் மற்றும் முறைகேடுகளை தவிர்க்க தடுக்க மாநிலம் முழுவதும் "இ சலான்" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக போக்குவரத்து போலீசாருக்கு நவீன வசதிகளுடன் கூடிய கருவி கையில் வைத்து உபயோக்கிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறையின் சார்பாக ஒரு மாத காலம் சோதனை முயற்சியாக நேற்று சனிக்கிழமை முதல் இத்திட்டம் துவக்கப்பட்டது. இதனை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவங்கி வைத்தார்.

இக்கருவியில் போக்குவரத்து விதிமுறை மீறும் வாகனங்களின் எண்ணை பதிவு செய்தால் போதும். வட்டார போக்குவரத்து அலுவலக "சர்வர்"களுடன் இணைக்கப்பட்டுள்ள கருவியில் குறிப்பிட்ட வாகன ஓட்டியின் பெயர், வாகனத்தின் இன்ஜின் எண், வீட்டு முகவரி உள்பட அனைத்து தகவல்களும் உடனடியாக தெரிந்து விடும். மேலும் லைசன்ஸ் இல்லாதது உள்ளிட்ட 78 போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன. அபராத தொகையை ஏடிஎம் கார்டு, கிரிடிட் கார்ட் பேடிஎம் மூலம் செலுத்தி சலான் போன்றவை "பிரிண்ட்" எடுக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் போக்குவரத்து காவல்துறையினர் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.இந்த நவீன கருவியில் ஜிபிஆர்எஸ், ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் மூலம் காவல்துறையினர் இருப்பிடம் நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்கலாம். தங்கள் எல்லைக்குள் இல்லாமல் வேறு பகுதியில் காவல்துறையினரால் அபராதம் வசூலிக்க முடியாது. ஒருவர் கருவியை வேறு ஒருவர் மாற்றி பயன்படுத்த முடியாது. இதற்காக பிரத்யேக ஐ.டி. மற்றும் "பாஸ்வேர்ட்" எண் கொடுக்கப்பட்டுள்ளது. திருட்டு வழக்கில் தேடப்படும் வாகனங்கள் பெயர் மோசடி உள்ளிட்டவையையும்ட கண்டுபிடித்துவிடலாம்.

தற்போது முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 காவல்நிலைய போக்குவரத்து எஸ்ஐகளுக்கும் இக்கருவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

-எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x