Published : 10 Aug 2019 07:46 PM
Last Updated : 10 Aug 2019 07:46 PM

காஷ்மீர் பிரச்சினை: மோடியின்  இரண்டாவது ஆட்சிக் கப்பல், தொடக்கத்திலேயே தரை தட்டிவிட்டது: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

‘ஒருகட்சியின்’ சர்வாதிகார வேட்டைக்கு, அரசியல் சட்டமும், அதன் அடிப்படை நோக்கங்களும் இரையாவதை அனுமதிக்கமாட்டோம், காஷ்மீருக்கு உடனடியாக அனைத்துக்கட்சித்தலைவர்கள் கொண்ட பாராளுமன்ற குழுவை அனுப்ப வேண்டும் என திமுக தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று(ஆக.10) மாலை நடந்தது. இதில் திமுகவின் தோழமைக்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, முஸ்லீம் லீக், தி.க., ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கலந்துக்கொண்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

“தீர்வு காணப்படாமலேயே இருக்கும் விவசாயிகளின் பிரச்சினைகள், விடியலே இல்லாமல் வியர்வை சிந்தும் தொழிலாளர் பிரச்சினைகள், நாளுக்குநாள் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், அதன் காரணமாக விரக்தியின் எல்லைக்கே சென்று கொண்டிருக்கும் இந்த நாட்டின் இளைஞர்கள் என இன்னும் பல நூறு பிரச்சினைகள் கோரப் பற்களையும் கூரிய நகங்களையும் காட்டிப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், 2019-நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன.

அதில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்தது. கடந்த ஐந்தாண்டுகளில் தீராத பிரச்சினைகளுக்கு, இப்போதாவது தீர்வு காண்பார்கள் என்று வாக்காளர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அந்தப் பெரும்பான்மை எதிர்பார்ப்பு பொய்த்துப் போய், ஏமாற்றமே எஞ்சி நிற்கிறது.

விளையும் பயிர் முளையிலே என்பதற்கொப்ப, பிரதமர் மோடி அவர்களின் இரண்டாவது ஆட்சிக் கப்பல், தொடக்கத்திலேயே தரை தட்டிவிட்டது. ஏற்கனவே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுடன் மேலும் பிரச்சினைகள் கூடிவிட்டன. இந்தியப் பொருளாதாரம் புதிய நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 70 ரூபாய் என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்து விட்டது.

உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்திற்குப் போய்விட்டது. இத்தகைய பெரும் பின்னடைவுகளைத் தடுத்தி நிறுத்திட பாஜக அரசு தவறிவிட்டது. செய்ய வேண்டியதை, முனைப்பு காட்டிச் செய்வதை விடுத்து, செய்யக் கூடாதவற்றில் அதிதீவிர கவனமும் நாட்டமும் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்ட 36 மசோதாக்களில், பெரும்பான்மை மசோதாக்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவை; மாநில உரிமைகளுக்கு முரணானவை; மக்கள் நலனுக்குப் புறம்பானவை; கார்ப்பரேட்டுகளுக்குக் களிப்பு ஊட்டுபவை. அவற்றில் சில, ஆர்.எஸ்.எஸ் தழுவியிருக்கும் அடிப்படை நோக்கத்திற்கானவை.

72 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் இணைந்த காஷ்மீர் மாநிலத்தையும், 70 வருடங்களுக்கு முன்பு அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது அரசியல் சட்டப் பிரிவையும் ரத்து செய்திருக்கிறது மத்திய பாஜக அரசு. அத்துடன் காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றத்தைத் திட்டமிட்டுக் கலைத்து, ஆளுநர் ஆட்சியைப் புகுத்தி, ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு ராணுவத்தை நிறுத்தி, ஊரடங்குச் சட்டம் போட்டு, அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துக் கைதிகளாக்கி, தகவல் தொடர்பு சாதனங்களை முடக்கி, காஷ்மீரத்தையே சிறைக் கூடாரமாக்கி, சர்வாதிகாரமாக இந்த திடீர் மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

நியாயப்படுத்த முடியாத - பாஜகவின் அடிப்படைவாத எண்ணத்திற்கும், அதை நிறைவேற்ற இந்திய மக்கள் வழங்கிய பெரும்பான்மைத் தீர்ப்பைத் தவறான முறையில் பயன்படுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“காஷ்மீர் சிங்கம்” என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல்லா அவர்களும் - இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் இந்த சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370ஆவது பிரிவு (வரைவு பிரிவு 306) குறித்து ஐந்து மாதங்கள் தொடர் ஆலோசனை நடத்தி, தீர்க்கமாக விவாதித்து உருவாக்கப்பட்டது. இன்றைய பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு நிராகரித்திருப்பது, மிகவும் மோசமான நடவடிக்கையாகும்.

370-ஆவது பிரிவை இயற்றிய, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கோபாலசாமி அய்யங்கார், “காஷ்மீர் மாநிலம் தனித்துவமானது. ஆகவே தனித்துவமான சலுகை அளிக்கப்படுகிறது என்று இந்த அரசியல் சட்டப் பிரிவின் மீதான விவாதத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

“ஜம்மு காஷ்மீர் மாநிலம் சந்தித்துள்ள தனித்துவப் பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த தனித்துவ அதிகாரத்தை வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று, இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசியல் நிர்ணய சபையிலேயே விளக்கம் அளித்திருக்கிறார் என்பதை, அவரைக் கொண்டாடும் பா.ஜ.க புரிந்துகொள்ள வேண்டும்.

“இந்த சட்டப்பிரிவை முழுவதுமாக நீக்கும் எண்ணம் இல்லை” என்று இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் பாராளுமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு கற்றறிந்த அறிஞர்கள், தொலைநோக்குப் பார்வை மிக்க அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதைவிட, இவ்வளவு காலத்திற்குப் பிறகுப் புதியதாக யாரும் எதையும் எடுத்துரைப்பதற்கோ, விமர்சனம் செய்வதற்கோ, மாற்றி அமைப்பதற்கோ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்திருப்பது, மாபெரும் ஜனநாயகப் படுகொலை, காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மன்னிக்க முடியாத துரோகம், அரசியல் சட்டத்தின் மீது நடத்தப் பட்டிருக்கும் அத்துமீறல், ஆக்கிரமிப்பு என்று, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருதுகிறது.

காஷ்மீரத்து மக்களுக்கு, இந்தியப் பிரதமர், இந்திய அரசியல் நிர்ணய சபை, இந்தியப் பாராளுமன்றம் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மத்திய பாஜக அரசு தனது கட்சியின் மதரீதியான சிந்தனையை ஈடேற்றிக் கொள்ள எத்தனிப்பது அதிர்ச்சி அளித்திடக் கூடியதாகும் எனவும், அது பாரதிய ஜனதா கட்சி நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்துவிட்டது எனவும் இக்கூட்டம் பதிவு செய்திட விரும்புகிறது.

“ராமர்கோயில், பொது சிவில் சட்டம், 370 ஆவது பிரிவு நீக்கம் ஆகியவற்றை ஒத்தி வைக்கிறோம்” என்று ஆட்சியில் அமருவதற்காக “சென்னைப் பிரகடனம்” செய்தது பாஜக ஆனால் இன்றைக்கு நேர்மாறாக, நாடாளுமன்றப் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, தங்களது மதவாத அரசியலை முன்னெடுத்துச் செல்லுகிறது.

“வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்” என்ற உயர்ந்த கோட்பாட்டை, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடித்து, இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு அதுதான் பாதுகாப்பு அரண் என இந்திய மக்கள் உலகுக்கு நிரூபித்துவரும் நேர்த்தியை நீர்த்துப் போகச் செய்வது, வரலாற்றை மாற்றி அழிவுத் திசையில் எழுதிச் செல்வதாகிவிடும்.

ஆளுநரை முதல்வராக பாவித்து, ஆளுநர் ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு சமமாகக் கற்பனை செய்து கொண்டு, இந்த சர்வாதிகார முடிவினை எடுத்துள்ள மத்திய அரசு அரசியல் சட்டம் வரையறுத்துக் கொடுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தையும் அவமதித்துள்ளது.

“ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் பரிந்துரையைப் பெற வேண்டும்” என்ற அரசியல் சட்டப் பிரிவு 370(3)-யையும், ஒரு மாநிலத்தைப் பிரிக்கும் மசோதாவினை, அந்த மாநில சட்டமன்றம் பரிந்துரைத்த பிறகே, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசியல் சட்டப் பிரிவு 3-ன் ஆகிய இரு பிரிவுகளையும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அப்பட்டமாக மீறியிருக்கிறது.

இன்று காஷ்மீருக்கு நேர்ந்தது, நாளை எந்த மாநிலத்திற்கும் நேரும் என்ற அபாயமும் தொக்கி நிற்கிறது. இந்த சட்டத்தை முன் உதாரணமாகக் கொண்டு, அந்த ஆபத்து எதிர்காலத்தில் எந்த ஒரு மாநிலத்திற்கும் நேரவே நேராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அந்தவகையில் இது மிக மோசமான முன்னுதாரணமாக, அரசமைப்புச் சட்டத்தின் மாறாத ரணமாக அமைந்துவிடும்.

“அரசியல் சட்டப் பிரிவு 370 நிரந்தரமானது” என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், அந்தத் தீர்ப்பைக் கூட மதிக்காமல் மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கின்ற விபரீத வேலையில் ஈடுபட்டுள்ள மத்திய பாஜக அரசு, சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மையுடன் வாழும் அனைத்துத் தரப்பு மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்கும் விஷப் பரிசோதனையில் இறங்கி இருக்கிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசில், இந்திய அரசியல் சட்டமும், அதன் நோக்கங்களும், அதன் அமைப்புகளும், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை இந்தக் கூட்டம் அதிர்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல், அந்த மக்களின் விருப்பத்தை அறியாமல், பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட கூட்டாமல், இப்படியொரு ஒருதலைபட்ச முடிவினை அவசரகதியில் எடுத்திருப்பது, விரும்பத் தகாத பின்விளைவுகளை ஏற்படுத்திடக் கூடியதாகும்.

உலகம் போற்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், “ஒருகட்சியின்” சர்வாதிகார வேட்டைக்கு, அரசியல் சட்டமும், அதன் அடிப்படை நோக்கங்களும் இரையாவதை, இந்திய மக்கள் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள் என்று, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் உறுதிபடத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.

எந்த இடத்திலும், இந்திய ஜனநாயகத்தின் சுவாசப் பையில் ஒரு சிறு துளையும் ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்திட, அனைத்துக் கட்சிகளும் நெருக்கடியான இந்த நேரத்தில் ஓரணியில் நின்று போராடுவது என்று இந்தக் கூட்டம் உறுதி எடுத்துக் கொள்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களையும் ஏனையோரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த விதக் குந்தகமும் இன்றி, இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும், விரைவில் சகஜ நிலை திரும்பவும், பொதுமக்கள் தங்களுடைய வாழ்வாதார வழிமுறைகளை வழக்கம்போலப் பின்பற்றவும், தகவல் பரிமாற்ற சாதனங்கள் இயல்பான முறையில் சுதந்திரமாகச் செயல்படவும் அனுமதித்து, உரிய ஏற்பாடுகளை எந்தவித உள்நோக்கமும் இன்றிச் செய்ய வேண்டும்.

மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ள ஜனநாயக விரோத, மக்கள் விரோத, கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் முரணான முடிவுகளை, உச்சநீதி மன்றம் இந்தப் பிரச்சினையை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் வரை, பாதிக்கப்படும் மக்களின் எண்ண ஓட்டத்தைத் தெரிந்து கொள்ளும் வண்ணம், காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும், அரசும் அமையும் வரை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும், அதன் செயல்பாட்டினையும், மத்திய பாஜக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

காஷ்மீரில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாலும், அங்கு செல்ல முயற்சி செய்யும் அரசியல் கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாலும் காஷ்மீரின் உண்மை நிலையை அறிந்து கொள்ளமுடியாத இருள் சூழ்ந்த ஒரு நெருக்கடி நிலவுகிறது.

ஆகவே மத்திய அரசு உடனடியாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஒரு அனைத்துக் கட்சிக் குழுவினை காஷ்மீருக்கு அனுப்பி, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடி உண்மை நிலையினை நாட்டு மக்களுக்கு தெரிவித்திட ஏதுவானதொரு ஏற்பாட்டினைச் செய்திட முன்வரவேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x